கர்தினால் எர்னஸ்ட் சீமோனி கர்தினால் எர்னஸ்ட் சீமோனி  

கோர்கோனா சிறை கைதிகளுக்கு திருத்தந்தையின் மடல்

நாம் அனைவருமே தவறு செய்பவர்களே, ஆனால், நம் தவறுகளுக்காக மன்னிப்பை வேண்டும்போது, இறைவன் நம்மை மன்னித்து அரவணைக்கிறார் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் அனைவரும் தவறு செய்பவர்களே, ஆனால், கடவுள் எப்போதும் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார் என்ற மையக்கருத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் உள்ள ஒரு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இத்தாலியின் கோர்கோனா (Gorgona) தீவு சிறையிலிலுள்ள கைதிகள் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதியிருந்த ஒரு மடலுக்கு, திருத்தந்தை அனுப்பிய பதில் மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆல்பேனியா நாட்டில், கம்யூனிச அடக்குமுறையின் கீழ், 25 ஆண்டுகள் கடும்பணியாற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட, 91 வயது நிறைந்த கர்தினால் எர்னஸ்ட் சீமோனி (Ernst Simoni) அவர்கள் வழியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலை அனுப்பினார்.

துன்பங்கள், மறுசீரமைப்பு, கல்வி மற்றும் மீட்பின் பலன்களைக் கண்டுவரும் சிறைக்கைதிகளுடன் நெருக்கமாக இருந்து பணிபுரிய வேண்டிய கடமை, திருஅவைக்கு உள்ளது என்பதை தன் மடலில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவருமே தவறு செய்பவர்களே, ஆனால், நம் தவறுகளுக்காக மன்னிப்பை வேண்டும்போது, இறைவன் நம்மை மன்னித்து அரவணைக்கிறார் என்று கூறியுள்ளார்.

மாற்றத்தின் பாதையில் செல்லவிரும்பும் சிறைக்கைதிகளுக்குப் பக்கபலமாக இருக்கும் மக்களுக்கு, திருத்தந்தை, இம்மடல் வழியே தன் நன்றியை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடலை ஏந்திச் சென்ற கர்தினால் சிமோனி அவர்கள், கொர்கோனா சிறையில் கைதிகளைச் சந்தித்து, அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றியபின், அவர்களது அனுபவங்களுக்குச் செவிமடுத்ததோடு, அவர்களுடன் உணவருந்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2019, 15:57