தேடுதல்

Vatican News
திருநற்கருணை பவனி திருநற்கருணை பவனி  

ஜூன் 23ல், காசல் பெர்த்தோனேயில் திருநற்கருணை பவனி

இச்செவ்வாயன்று, இந்தோனேசியாவின் 36 ஆயர்களை, அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 11, இச்செவ்வாய் காலையில், இந்தோனேசியா நாட்டின் 36 ஆயர்களை, அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

தென்கிழக்கு ஆசியாவில் பெரிய நாடாகவும், உலகில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கின்ற நாடுமாகிய இந்தோனேசியாவில், 87.2 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். இவர்களில் 99 விழுக்காட்டினர், சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். அந்நாட்டில் உரோமன் கத்தோலிக்கர் 2.9 விழுக்காடாகும். இந்நாடு, 17 ஆயிரத்திற்கு அதிகமான தீவுகளையும் கொண்டுள்ளது.

காசல் பெர்த்தோனே

இவ்வாண்டு, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாத் திருப்பலி மற்றும் திருநற்கருணை பவனியை, உரோம் நகரின் காசல் பெர்த்தோனே (Casal Bertone) பகுதியில் நிகழ்த்தவுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 23, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாத் திருப்பலியை, அன்று மாலை ஆறு மணிக்கு, காசல் பெர்த்தோனே பகுதியிலுள்ள, ஆறுதலின் அன்னை மரியா (Santa Maria Consolatrice) ஆலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.

இத்திருப்பலி முடிந்து, அப்பகுதியின் தெருக்கள் வழியாக, திருநற்கருணை பவனி நடைபெறும். அதன் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஆசீரை அளிப்பார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் அறிவித்தார்.

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின், 1982ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், திருநற்கருணை பவனி நிகழ்வை, உரோம் நகரில், மீண்டும் தொடங்கி வைத்தார். உரோம் இலாத்தரன் பசிலிக்காவிலிருந்து, உரோம் மேரி மேஜர் பசிலிக்கா வரை இந்தப் பவனி நடைபெற்றது. ஆயினும், இந்தப் பவனி, 2018ம் ஆண்டிலிருந்து உரோம் புறநகர்ப் பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஓஸ்தியாவில் இதை நிகழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2020ல் ஈராக் செல்ல விருப்பம்

2020ம் ஆண்டில் ஈராக் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள விரும்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு உதவும் நிறுவனங்கள் வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம், ஜூன் 10, இத்திங்களன்று தெரிவித்தார்.

அச்சந்திப்பில், அந்த நேரத்தில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டை இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன், அடுத்த ஆண்டில் அங்குச் செல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

11 June 2019, 15:19