தேடுதல்

Vatican News
பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலி பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலி  (Vatican Media )

திருவிழிப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

நாம் வகுக்கும் திட்டங்கள் பல, இறைவனை விட்டு விலகியதாக, நம் மீது மட்டுமே அதிக நம்பிக்கை கொண்டதாக உள்ளன – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் இதயத்தைத் திறந்து, அதன்வழியே நாம் செவிமடுக்கத் துவங்கினால், நம் இதயத்திற்குள் கொழுந்துவிட்டெரியும் பெந்தக்கோஸ்து தீயை உணர்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு முந்திய நாள் மாலை நிகழ்ந்த திருவிழிப்புத் திருப்பலியில் மறையரை வழங்கினார்.

ஜூன் 8, இச்சனிக்கிழமை மாலை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருவிழிப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, திருஅவை என்பது, நம் அனைவருக்கும் தாய் இல்லமாக இருப்பதால், அங்கு நாம் எவ்வேளையிலும் திரும்பி வரமுடியும் என்று கூறினார்.

நாம் வகுக்கும் திட்டங்கள் பல, இறைவனை விட்டு விலகியதாக, நம் மீது மட்டுமே அதிக நம்பிக்கை கொண்டதாக உள்ளன என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியே, நாம் விண்ணகத்தை நோக்கிய பாதையிலிருந்து விலகி, நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.

தன் மக்களின் அழுகுரலைக் கேட்டதாகவும், அவர்களின் துன்பங்களைக் கண்டதாகவும் மோசேயிடம் கூறும் இறைவன், மோசேயின் இதயமும் தன் இதயத்தைப்போல், இரக்கம் கொண்டதாகவும், மக்களின் துன்பங்களுக்குச் செவிமடுப்பதாகவும் இருக்கவேண்டும் என்று இறைவன் எதிர்பார்ப்பதையும் தன் மறையுரையில் நினைவூட்டினார், திருத்தந்தை.

10 June 2019, 16:32