திருத்தந்தையின் மறைக்கல்வியுரை திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 

மறைக்கல்வியுரை:ஆதிகால கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த நட்புறவு

சகோதரத்துவத்திலும், உடன்பிறந்த உணர்விலும், பிறரன்பிலும், பிறரின் தேவைகள் குறித்த அக்கறையிலும், ஒன்றிணைந்திருந்த ஒரு சமுதாயத்தை நம்முன் வைக்கிறார் புனித லூக்கா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தூதர் பணிகள் குறித்து, புதன்கிழமை மறைக்கல்வி உரைகளில் தன் எண்ணங்களை, திருப்பயணிகளோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், தன் உரையை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் துவங்குவதற்கு முன்னர், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கம் சென்று, அங்கு குழுமியிருந்த நோயாளர்களைச் சந்தித்து சில வார்த்தைகள் பேசினார். வெளியே வெப்பம் அதிகம் இருப்பதால், நீங்கள் இங்கு அமரவைக்கப்பட்டுள்ளீர்கள், இங்கிருந்து பெரிய திரையில் மறைக்கல்வி உரையைப் பார்த்து, செவிமடுத்து, பங்குபெறுங்கள். உங்களுக்கு என் ஆசீர் வழங்குகிறேன். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள், எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களிடமிருந்து விடைபெற்று, பேராலய வளாகம் நோக்கிச் சென்றார். திருத்தூதர் பணிகள் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரை, இறைவன் மீதும், தங்கள் உடன்வாழ் சகோதரர்கள் மீதும் ஆதிகால கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த அன்பு குறித்ததாக இருந்தது.

முதலில் திருத்தூதர் பணி நூலிலிருந்து, 'அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்...... நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர் (தி.ப.2,42.44-45)' என்ற பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தையும், தன் உரையைத் தொடங்கினார்.

அன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, முதல் கிறிஸ்தவ சமுதாயத்தின் வாழ்வுமுறை குறித்து சிந்திப்போம். திருத்தூதர்களின் உரைக்குச் செவிமடுக்க எருசலேமில் திருஅவையாகக் கூடியிருந்த மக்களை, அனைத்துக் கிறிஸ்தவ சமுதாயத்தின் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார், புனித லூக்கா. முதல் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவில், சகோதரர் சகோதரிகளாக, திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்(தி.ப.2:42). சகோதரத்துவத்திலும், உடன்பிறந்த உணர்விலும், பிறரன்பிலும், பிறரின் தேவைகள் குறித்த அக்கறையிலும், ஒன்றிணைந்திருந்த ஒரு சமுதாயத்தை நம்முன் வைக்கிறார், புனித லூக்கா. ஒவ்வொரு காலத்திலும், திருஅவை, ஒப்புரவுடைய மனித குலத்தின் புளிப்புமாவாகவும், உண்மையான நீதியும் அமைதியும்கொண்ட உலகின் முன்னோடியாகவும் விளங்க அழைப்புப் பெற்றுள்ளது. உண்மையான திருவழிபாட்டு வாழ்வை வாழ்ந்து, திருநற்கருணையிலும், செபத்திலும்,  உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை அனுபவித்து, மீட்பளிக்கும் அன்பை இவ்வுலகிற்கு எடுத்துச் செல்ல பலம் பெறுகிறது திரு அவை. திருத்தூதர்களைச் சுற்றி குழுமியிருந்த ஆதிகாலக் கிறிஸ்தவர்களைப் போல் நமது சமுதாயங்களும், இறைவன் மற்றும் நம் சகோதரர்களுடன் சந்திப்பிற்கும், ஆழமான செபத்திற்கும் உரிய இடங்களாக மாறுவனவாக. இதுவே, புனிதர்களுடன் ஒன்றிப்புக்கும், வானக எருசலேமுக்கும் கதவுகளைத் திறப்பதாக இருக்கும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் வெள்ளிக்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்படவிருக்கும் இயேசுவின் திரு இதய திருவிழாவை நினைவூட்டி, இயேசுவின் இதயத்தை உற்றுநோக்கி அதிலிருந்து கற்றுக்கொள்வோம் எனக்கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2019, 11:30