புதன்மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன்மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

மறைக்கல்வியுரை : ருமேனியாவில் ‘ஒன்றிணைந்து நடைபயில’

ஒன்றிணைந்து நடக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இருந்த ருமேனிய திருத்தூதுப் பயணத்தின் கருப்பொருள், இப்பயணத்தின் வேவ்வேறு நிகழ்வுகளிலும் வெளிப்படுத்தப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரத்தில் ருமேனியாவில் தான் மேற்கொண்ட மூன்று நாள் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து ஞாயிறன்று மாலை வத்திக்கான் திரும்பினார். அத்திருப்பயணத்தின் முக்கியக் கூறுகளை எடுத்துரைப்பதாக அவரின் இப்புதன் மறைக்கல்வி உரை இருந்தது. முதலில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் 12ம் பிரிவின் முதல் சில வரிகள் வாசிக்கப்பட்டன. “திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம் (எபிரே.12,1-2a)”. பின்னர், திருத்தந்தையின் உரையும் துவங்கியது.

அன்பு சகோதரர் சகோதரிகளே,  ருமேனியா நாட்டில் நான் மேற்கொண்ட அண்மைத் திருத்தூதுப்பயணம், "நாம் இணைந்து நடைபயில்வோம்" என்பதை தன் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. அந்நாட்டு அரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும், அரசு அதிகாரிகளுக்கும், இத்திருத்தூதுப் பயணம் சிறந்த முறையில் இடம்பெற ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் என் நன்றியை வெளியிடுகிறேன். புனித பேதுருவின் வழிவந்த திருத்தந்தை, இருபது ஆண்டுகளுக்குப்பின், அதாவது,  புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், இந்நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்குப்பின், ஒரு திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டது குறித்து, அனைத்திற்கும் மேலாக, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். உடன்பிறந்த உணர்விலும், இணக்க வாழ்விலும் ஒன்றிணைந்து நடக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இருந்த இத்திருத்தூதுப் பயணத்தின் கருப்பொருள், இப்பயணத்தின் வெவ்வேறு நிகழ்வுகளிலும் சிறப்பான விதத்தில் வெளிப்படுத்தப்பட்டது. முதுபெரும்தந்தை டேனியல் அவர்களுடனும், ருமேனிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் மாமன்றத்துடனும் நான் நடத்திய சந்திப்பை மிக ஆழமான நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். இவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, முழு ஒன்றிப்பை நோக்கி இணைந்து நடப்பதற்குரிய கத்தோலிக்கத் திருஅவையின் அர்ப்பணத்தைப் புதுப்பித்தேன். அந்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மூன்று திருப்பலிகளும், பல்வேறு கத்தோலிக்க சமூகங்களை ஒன்றாகக் கொணர்ந்ததுடன், ஏழு கிரேக்க-கத்தோலிக்க ஆயர்களை அருளாளர்களாக உயர்த்தியதுடன் நிறைவுற்றன. நற்செய்தி கொணர்ந்த விடுதலை மற்றும் கருணையின் சாட்சிகளாக, தங்கள் வாழ்வில் செயல்பட்டவர்கள் இந்த மறைசாட்சிகள். குடும்பங்கள் மற்றும் இளையோரோடு இடம்பெற்ற எனது சந்திப்பு, சிறப்பான விதத்தில் மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. இறுதியில், ROM இன மக்களோடு நான் மேற்கொண்ட சந்திப்பின்போது, அனைத்துவிதமான பாகுபாடுகளுக்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் உரிய மாண்பும் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் என்பதற்காகவும், மீண்டுமொருமுறை என் விண்ணப்பத்தை முன்வைத்தேன். ருமேனியா நாட்டையும் அங்குள்ள திருஅவையையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென நாம் அனைவரும் செபிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வத்திக்கானில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசுத்தலைவர்கள், தன்னையும் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்களையும் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். புனித பூமியில் அமைதி நிலவச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2019, 14:48