ருமேனியாவிலிருந்து திரும்பிய விமானப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ருமேனியாவிலிருந்து திரும்பிய விமானப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் ருமேனியத் திருத்தூதுப்பயணம் குறித்த ஓர் அலசல்

ருமேனியத் திருத்தூதுப்பயணம், கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், மதத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கும்கூட, வலுவான நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

உலகில் ஒரே அமைப்பாக, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துவந்த கிறிஸ்தவத்தில், 1054ம் ஆண்டில் பெரிய பிரிவினை ஒன்று உருவாகி, கிழக்கில் ஆர்த்தடாக்ஸ் சபை, மேற்கில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவை என, இரண்டாகப் பிரிந்தது. இதற்குப் பின்னாளில் தலைமைத்துவத்தை ஏற்ற கத்தோலிக்கத் திருத்தந்தையர், ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்தவ சபைகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்தனர். 1999ம் ஆண்டு, மே மாதத்தில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ருமேனியாவுக்கு, திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார். அப்பயணம், 1054ம் ஆண்டிற்குப் பின்னர், ஒரு கத்தோலிக்க திருத்தந்தை, ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ருமேனியாவுக்கு மேற்கொண்ட முதல் திருத்தூதுப்பயணமாகவும், ஆர்த்தாடக்ஸ் சபையுடன் நல்லுறவை உருவாக்கும் முயற்சியாகவும் அமைந்தது. மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடுகளில், கம்யூனிசம் வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் என, உலகளவில் போற்றப்பட்ட புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ருமேனியாவில் நல்வரவேற்பையும் பெற்றார். அச்சமயத்தில், தலைநகர் புக்காரெஸ்ட்டில் மட்டுமே பயண நிகழ்வுகளை நிகழ்த்துவதற்கு, ஆர்த்தடாக்ஸ் சபை, திருத்தந்தைக்கு அனுமதியளித்தது. அந்நாட்டில் கத்தோலிக்கர் பெரும்பான்மையாக வாழ்கின்ற டிரான்சில்வேனியப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. ஆயினும், இது நடைபெற்று இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ருமேனியாவில் மேற்கொண்ட மூன்று நாள்கள் (மே,31-ஜூன்,02,2019) திருத்தூதுப் பயணத்தில், புக்காரெஸ்ட் நகரிலிருந்து, வடகிழக்காக மோல்டோவா எல்லையிலுள்ள Iasi நகர் வரையிலும், வடமேற்காக, டிரான்சில்வேனிய மாநிலத்திலுள்ள பிளாஜ் நகருக்கும், சுமுலியு சுக் அன்னை மரியா திருத்தலத்திற்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டார். மழை பெய்து சகதியால் நிறைந்திருந்த வளாகத்தில், திறந்தவெளித் திருப்பலியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றினார். மேலும், ஆர்த்தாடக்ஸ் சபையுடன் உள்ள திறந்த காயங்களைச் சரிசெய்யும் விதமாக, புக்காரெஸ்ட் நகர், மக்களின் மீட்பு ஆர்த்தடாக்ஸ் புதிய பேராலயத்தில், ருமேனிய ஆர்த்தாடக்ஸ் சபைத் தலைவர் முதுபெரும்தந்தை டானியேல் அவர்களுடன் சேர்ந்து செபித்தார் திருத்தந்தை. அச்சபையின் மாமன்றத்திலும் உரையாற்றினார். பழங்காலத் தவறுகளையும், முற்சார்பு எண்ணங்களையும் மறந்து, பொதுவான இலக்கு நோக்கி ஒன்றிணைந்து நடைபயில்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மகிழ்வில் ருமேனியர்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ருமேனியாவில் மேற்கொண்ட இந்த மூன்று நாள்கள் திருத்தூதுப் பயணம் குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, ருமேனிய கிரேக்க-கத்தோலிக்க பேராயர் Claudiu Pop அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். இப்பயணம் ருமேனிய மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்வை அளித்துள்ளது. இது, ருமேனியக் கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், மதத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கும்கூட, வலுவான நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமுதாய முரண்பாடுகளை மேற்கொண்டு, பழைய காயங்களைக் குணப்படுத்துவதற்கு, இன்றும் கடுமையாய் முயற்சித்து வருகின்ற ருமேனியாவில், சாதாரண எளிய மக்களும், சுத்தமான காற்றைச் சுவாசிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையிலேயே உதவியுள்ளார். திருத்தந்தையைக் காணும் ஆவலில், ஓர் ஆர்த்தடாக்ஸ் குடும்பம், கால்களில் அறுவை சிகிச்சை செய்து கட்டுகளுடன், நகருவதற்கு மிகவும் கஷ்டப்படும் தங்களின் குழந்தையுடன், 400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துவந்து, திருத்தந்தையைச் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். கத்தோலிக்கத் திருஅவை பற்றி அதிகம் தெரிந்திராத மக்கள்கூட, திருத்தந்தையைக் கண்டு, ஆண்டவர் பக்கம் நெருங்கியுள்ளனர். இத்திருத்தூதுப் பயணம் அன்னை மரியா மீதுள்ள பக்தியை மேலும் அதிகரித்துள்ளது. ருமேனியாவில், கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்று, பேராயர் Claudiu Pop அவர்கள் கூறியுள்ளார்.

ஏழு புதிய அருளாளர்கள்

ருமேனியத் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளான இஞ்ஞாயிறன்று, அந்நாட்டின் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையில் மறைசாட்சிகளாக உயிர்துறந்த ஏழு ஆயர்களை, அருளாளர்களாகவும் திருத்தந்தை அறிவித்தார். மறைசாட்சியத்தின் உண்மையான நிலையை உணர்ந்து கொள்வதற்கு, இந்நிகழ்வு உதவியது என, ருமேனிய பேராயர் Pop அவர்கள் தெரிவித்துள்ளார். 1948ம் ஆண்டில் ருமேனியாவில், சோவியத் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்த பின்னர், அதே ஆண்டு நவம்பர் 28 மற்றும் 29ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், கிரேக்க-கத்தோலிக்க ஆயர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ருமேனியாவில் கிரேக்க-கத்தோலிக்க திருஅவை தடை செய்யப்பட்டது. திருஅவையின் சொத்துக்கள் ஆர்த்தடாக்ஸ் சபையுடன் இணைக்கப்பட்டன. அதுவுமன்றி, விசுவாசிகளும், அச்சபையில் சேருவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு இணங்காதவர்கள் கடுமையாய்த் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் கொலைசெய்யப்பட்டனர். அக்காலத்தில், கத்தோலிக்கர் பலர், மறைவாகவே, திருவழிபாடுகளை நடத்தினர். 

இஞ்ஞாயிறன்று பிளாஜ் நகரில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்ட, Valeriu Traian Frenţiu, Vasile Aftenie, Ioan Suciu, Tit Liviu Chinezu, Ioan Bălan, Alexandru Rusu, Iuliu Hossu ஆகிய எழுவரும், 1948ம் ஆண்டுக்கும், 1970ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறையில், பசி, நோய், கடின வேலை போன்றவற்றால் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாகி இறந்தவர்கள். இவர்கள், பெயர் குறிக்கப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டனர். இவர்களில், Frenţiu, Aftenie, Suciu, Chinezu ஆகிய நால்வரும், சிறையிலேயே இறந்தனர். Bălan, Rusu, Hossu ஆகிய மூவரும், சிறையில் அனுபவித்த கடும் சித்ரவதைகளால் பின்னர் இறந்தனர். Iuliu Hossu அவர்கள், உரோம் நகரில் இறையியல் படிப்பை முடித்து திரும்பியவுடன், சர்வாதிகாரி Nicolae Ceausescu ஆட்சியில், 22 ஆண்டுகள் சிறையில் இருந்தார். எனது போராட்டம் முடிந்தது, உங்கள் போராட்டம் தொடரும் எனச் சொல்லி இவர் உயிர் துறந்தார். 1969ம் ஆண்டில், புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இவரைக் கர்தினலாக உயர்த்திய செய்தி இவரை எட்டவே இல்லை. Vasile Aftenie அவர்கள், உரோம் நகரில் படிப்பை முடித்து திரும்பியவுடன், கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்குப் பின், வேறோர் இடத்திற்கு மாற்றப்பட்டு, அனுபவித்த கடும் சித்ரவதைகளால் ஏற்பட்ட காயங்களால் உயிர்துறந்தார். ருமேனிய சர்வாதிகாரி Ceausescuயின் ஆட்சி வீழ்ந்து முப்பது ஆண்டுகள் ஆகியும், கம்யூனிச ஆட்சியில், கத்தோலிக்கரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, ஆர்த்தடாக்ஸ் சபையிடம் கொடுக்கப்பட்ட சொத்துக்களில் பல, இன்னும் திருப்பி அளிக்கப்படாமலே உள்ளன. இதனால் கடந்தகாலக் காயங்கள் இன்னும் நிலவினாலும், பொதுவாக, இவ்விரு சபைகளுக்கும் இடையே நல்லுறவுகள் நிலவுவதாக, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நல்லுறவின் அடையாளமாக, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை டானியேல் அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த புனித பதக்கத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முத்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு

ருமேனியத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, உரோம் நகர் திரும்பிய விமானப் பயணத்தில், உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒருமைப்பாட்டின் அவசியம், கத்தோலிக்க-ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கிடையே உறவுகள், ஐரோப்பாவின் தற்போதைய நிலைமை உட்பட பல்வேறு தலைப்புகளில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐரோப்பாவில் மே 26ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களையொட்டி, ஐரோப்பாவின் அரசியல் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, ஐரோப்பா, தனக்கு முன்னிருக்கும் சவாலைச் சரியான முறையில் சந்திக்காவிட்டால், அக்கண்டம், ஐரோப்பா புதுமையையும், ஆற்றலையும் இழந்து சருகாகும். இக்கண்டம், பிரிவினைகள் மற்றும் எல்லைகள் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு, அது தனது தனித்துவத்தையும், தனது ஒன்றிப்பையும் கண்டுணர வேண்டும். எதையும் குறைகாணும் கண்ணோட்டம் மற்றும் கருத்தியல்களால் ஆட்கொள்ளப்படாதவாறு, ஐரோப்பா தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். ஐரோப்பாவிற்காக, அதன் ஒன்றிப்பிற்காகச் செபிக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

உலகளவில் ஒருமைப்பாடு

தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு திருத்தந்தை வழங்கும் செய்தி என்னவென, ருமேனியச் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, குடும்பத்திலிருந்து பிரிந்து வாழும் நிலை, எப்போதுமே வேதனையானது, இத்தகைய பிரிவினைகள் தேவை என அமைக்கப்படும் கொள்கைகள் குறித்து கவலை தெரிவித்தார். இது உள்ளூர் பிரச்சனைகள் மட்டுமல்ல, ஒருமைப்பாடு இல்லாத உலகளாவிய பிரச்சனை என்றும் திருத்தந்தை கூறினார். மேலும் இத்தாலி பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இத்தாலிய அரசியல் பற்றிய புரிதல் தனக்கு இல்லை என்றார். ஆயினும், அனைத்து இத்தாலியர்களும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். அடிக்கடி வெறுப்பும், அச்சமும் விதைக்கப்படுகின்றன. எனவே அரசியல்வாதிகள் நேர்மையுடன் இருப்பதற்கு நாம் உதவ வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார். ஊழலுக்கு எதிராய்ப் பேசியவேளை, இது எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.  

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, கைகுலுக்கிப் பேசுகின்ற ஒவ்வொரு நேரமும், தனக்குச் சக்தி கிடைப்பதாகத் தெரிவித்தார். ஏனெனில் அவருக்கு முழங்காலில் மட்டுமே பிரச்சனை உள்ளது, அவரது அறிவு மிகத் தெளிவாக இருக்கின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆர்த்தாடக்ஸ் சபை

ஒவ்வோர் ஆண்டும் பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக சமூகத் தொடர்பு நாள், பல்சமய உறவுகள், பல்வேறு இனங்களுக்கு இடையே உறவுகள், பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே உறவுகள், உலகளாவிய அரசியல் போன்ற தலைப்புகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கும், திருத்தந்தை பதிலளித்தார். ஆர்த்தாடக்ஸ் சபை பற்றிக் குறிப்பிட்டபோது, ருமேனிய ஆர்த்தாடக்ஸ் சபைத் தலைவர் முதுபெரும்தந்தை டானியேல் அவர்களைப் புகழ்ந்து பேசினார். நாங்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் போன்று உரையாடினோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இறைவனின் அன்னையின் தோட்டம் என அழைக்கப்படும் ருமேனியத் திருத்தூதுப் பயணத்தை முடித்து வத்திக்கான் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர், அன்னை மரியா பசிலிக்கா சென்று, நன்றியாக மலர்களை அர்ப்பணித்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மொத்தத்தில் ருமேனியத் திருத்தூதுப் பயணம், அந்நாட்டின் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், புதிய உந்து சக்தியையும் அளித்துள்ளது என்றே சொல்லப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2019, 16:14