மூவொரு கடவுள் மற்றும் அடிமைகள் துறவு சபையின் பொதுப் பேரவை உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் மூவொரு கடவுள் மற்றும் அடிமைகள் துறவு சபையின் பொதுப் பேரவை உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை - வெளியே சென்று இளையோரை சந்தியுங்கள்

தங்களின் வாழ்வுப் பாதையில், நாம் உடன்நடக்க வேண்டுமென்றும், தாங்கள் இருப்பதுபோலவே அன்புகூரப்பட வேண்டுமென்றும் இளையோர் விரும்புகின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மூவொரு கடவுள் மற்றும் அடிமைகள் துறவு சபையினரும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றவர்களும், பள்ளிகள், பங்குத்தளங்கள், சிறைகள், மறுவாழ்வு மையங்கள் உட்பட பல இடங்களில் ஆற்றிவரும் பல்வேறு இரக்கச் செயல்களுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 15, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் தன்னைச் சந்திக்க வந்திருந்த, மூவொரு கடவுள் துறவு சபையினரின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ எழுபது பிரதிநிதிகளிடம், அச்சபையினரின் இரக்கப் பணிகளுக்கு, குறிப்பாக, கிறிஸ்தவ விசுவாசத்திற்காகத் துன்புறும் திருஅவைகளுக்கு ஆதரவாக ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சபையினரின் பொதுப்பேரவை, இளையோர் மற்றும் இறையழைப்பை மையப்படுத்தி, கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவது பற்றியும் பாராட்டிப் பேசிய திருத்தந்தை, பன்மைத்தன்மைகொண்ட இளையோர் உலகை, வழிநடத்த படைப்பாற்றல்திறன் தேவைப்படுகின்றது என்றும், இளையோரின் நியாயமான ஏக்கங்களுக்கு உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

‘இளையோருடன் நெருக்கமாக இருத்தல்’, ‘வெளியே சென்று இளையோரைச் சந்தித்தல்’, ‘புனிதர்களாக இருப்பார்களாக’ ஆகிய மூன்று தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, தங்களுக்கு நெருக்கமாக   இருக்க வேண்டுமென, இளையோர் விரும்புகின்றனர் என்று கூறினார்.

இளையோர் தங்களின் வாழ்வுப் பாதையில், நாம் உடன்நடக்க வேண்டுமென்றும், தாங்கள் இருப்பதுபோலவே அன்புகூரப்பட விரும்புகின்றனர் என்றும் உரைத்த திருத்தந்தை, தங்களிடம் வருகின்ற இளையோரை மட்டுமல்லாமல், இளையோரை வெளியே தேடிச்சென்று, சந்திக்க வேண்டும் என்றார்.

இளையோரை இறைவன் பக்கம் கொண்டு வருவது, அனைத்துத் துறவற வாழ்வின் பலமாக உள்ளது என்றும், அதற்கு, மிகவும் சரியான நேரம் மற்றும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியாவிடினும், துணிச்சலுடன் வலைகளை வீச வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை மற்றும் புதியனவைகளின் இறைவாக்கினர்களாக இருங்கள் என்றும், அச்சபையினரிடம் கூறினார்.

ஒவ்வொருவரும் தங்களின் சொந்த இறையழைப்பின் மகிழ்வை வாழ்வதே, இளையோர் மற்றும் இறையழைத்தல் பணியில், மிகச் சிறந்த மேய்ப்புப்பணியாக அமையும் என்பதை நினைவில் இருத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கனவு காண்கின்ற மற்றும் இறைவாக்குரைக்கும் பண்பைக் கொண்ட திறமையை, எவரும் திருடிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள் என்றும், மூவொரு கடவுள் துறவு சபை பிரதிநிதிகளிடம் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2019, 14:37