கடலின் விண்மீன் என்ற பெயருடன் இயங்கும் கடல்சார் பணிக்குழுவின் ஐரோப்பிய உறுப்பினர்களுடன்  திருத்தந்தை கடலின் விண்மீன் என்ற பெயருடன் இயங்கும் கடல்சார் பணிக்குழுவின் ஐரோப்பிய உறுப்பினர்களுடன் திருத்தந்தை 

கடலின் விண்மீன் பணிக்குழுவினரைச் சந்தித்த திருத்தந்தை

கடலின் விண்மீன், வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, பலருக்கு வழிகாட்டுவதுபோல, கடல்சார் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் உடன் இருப்பால் பயணிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவி செய்கின்றனர் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் கடல் வழி பயணிப்போருக்கு ஆன்மீகப் பணிகள் ஆற்றிவரும் அருள்பணியாளர்கள் மற்றும் உதவிகள் செய்யும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர், உரோம் நகரில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின் இறுதியில், ஜூன் 27, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தனர்.

கடலின் விண்மீன் - ஐரோப்பிய உறுப்பினர்கள்

கடலின் விண்மீன் என்ற பெயருடன் இயங்கும் இந்த கடல்சார் பணிக்குழுவின் ஐரோப்பிய உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையில், திருத்தந்தையை சந்தித்த வேளையில், அவர்களது பணியை, திருத்தந்தை பாராட்டினார்.

கடலின் விண்மீன் ஐரோப்பிய பணிக்குழுவினர், உரோம் நகரில் மேற்கொண்ட சந்திப்பில், கடல் வழி  பயணிப்போருக்கும், கடல்சார் தொழிலாளர்களுக்கும் பயன்தரும் பல விடயங்களைக் குறித்து விவாதங்கள் நிகழ்ந்துள்ளதை, தன் உரையின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

விண்மீன் போல, உடன் இருப்பால் உதவி செய்தல்

கடலின் விண்மீன் வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, பலருக்கு வழிகாட்டுவதுபோல, இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் உடன் இருப்பால் பயணிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பெருமளவு உதவி செய்கின்றனர் என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

பயணிகளோடும், தொழிலாளரோடும் தங்கியிருப்பதும், அவர்களது கதைகளுக்குச் செவி மடுப்பதும் செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடல்வழி நடைபெறும் பல கதைகளில், மனித வர்த்தகம் மிகக் கொடுமையானது என்பதை, வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

கடினமான கடல் வழி பயணங்களை மேற்கொள்ளும் வலுவற்றோருக்கு, கடலின் விண்மீன் பணிக்குழுவினர் ஆதரவும், சக்தியும் வழங்கி வருவதற்கு திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார்.

கடலின் விண்மீன் பணிக்குழுவின் 100வது ஆண்டு

கடலின் விண்மீன் பணிக்குழு, அடுத்த ஆண்டு, தங்கள் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருப்பதையும், அத்தருணத்தில், ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்க்கோ நகரில் 25வது உலக மாநாட்டைக் கொண்டாடவிருப்பதையும் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொண்டாட்டங்கள் இப்பணிக்குழுவினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட கடலின் விண்மீன் திருத்தூதுப் பணி, கடந்த காலத்தை சீர்தூக்கிப் பார்க்கும் அதே வேளையில், எதிர்காலத்திற்குத் தேவையான கனவுகளைக் காணவும், தூய ஆவியார் அனைவரையும் வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2019, 15:15