தேடுதல்

Vatican News
திருமுழுக்கு வழங்குதல் திருமுழுக்கு வழங்குதல் 

2019ம் ஆண்டு மறைபரப்புப்பணி நாளுக்கு திருத்தந்தையின் செய்தி

2019ம் ஆண்டு மறைபரப்புப்பணி நாளுக்கு திருத்தந்தையின் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களின் 'Maximum Illud' என்ற திருத்தூது மடல் வெளியிடப்பட்டதன் நூறாமாண்டு கொண்டாட்டங்களையொட்டி, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில், திருஅவையின் மறைபரப்புப்பணி குறித்த விழிப்புணர்வு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தான் அழைப்பு விடுத்துள்ளதை நினைவூட்டி, செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டின் உலக மறைபரப்புப்பணி நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, 'Maximum Illud' என்ற இவ்வேடு, இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைப்பதில் ஒரு தூண்டுதலை வழங்குவதாகவும், திருஅவையின் இப்பணி குறித்த அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதாகவும் அமைந்துள்ளது என்று தன் செய்தியில் கூறியுள்ளார்.

மறைபரப்புப்பணி உலக நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, "திருமுழுக்கு வழங்கி அனுப்பப்படுதல்: உலகில் மறைபரப்புப் பணியில் இயேசுவின் திருஅவை" என்ற தலைப்பு,  அக்டோபர் மாத செபக்கருத்திற்கு இணையாக அமைத்துள்ளது என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெய்வீக வாழ்வு என்பது, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஒரு பொருள் அல்ல, மாறாக, மற்றவர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஒரு புதையல் என்று எழுதியுள்ளார்.

இலவசமாகப் பெற்ற இறைவார்த்தை என்ற கொடையை, நாம் இலவசமாகவே வழங்கக் கடமைப்பட்டுள்ளோம், இதில் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் என்று எவரும் இல்லை என்று கூறும் திருத்தந்தை, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறைப்பரப்புப் பணியாளர்களே என்பதை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

10 June 2019, 15:54