தேடுதல்

Vatican News
ROACO அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் சந்திப்பு ROACO அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் சந்திப்பு  (Vatican Media)

ROACO அமைப்பின் பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை

பல்வேறு மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துவரும் சிரியாவில், மக்கள் அடையும் கொடுமைகளால் எழும் அழுகுரல், வானம்வரை சென்று, இறைவனின் இதயத்தைத் தொடுகிறது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்கள் நம்பிக்கைகள் திருடப்பட்ட நிலையில் வாழும் பல்வேறு நாடுகளின் மக்கள் குறித்து ஆழமாக சிந்திக்கவேண்டிய நேரமிது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழைவழிபாட்டு முறை திருஅவைகளுக்கு உதவும் ROACO எனப்படும் அமைப்பின் உறுப்பினர்களிடம் கூறினார்.

தங்கள் 92வது நிறையமர்வுக் கூட்டத்தைத் துவங்கியுள்ள ROACO அமைப்பினரை ஜூன் 10, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, கீழை வழிபாட்டு முறையைப் பின்பற்றும் நாடுகள், குறிப்பாக, சிரியா, மற்றும் ஈராக் நாடுகள் அடைந்துவரும் துன்பங்களை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டி, தன் கவலையை வெளியிட்டார்.

பல்வேறு மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துவரும் சிரியாவில், பசி, மருத்துவ உதவிகளும், கல்வி வசதிகளும் இல்லாத நிலை, பெற்றோரை இழத்தல், கைம்பெண்கள் அடையும் இன்னல்கள் போன்ற கொடுமைகளால் எழும் அழுகுரல், வானம்வரை சென்று, இறைவனின் இதயத்தைத் தொடுகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஈராக், மற்றும் உக்ரைன் நாடுகளில் வாழும் மனிதர்கள் அடைந்து வரும் துன்பங்கள் குறித்தும் தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு சிறு உதவி அமைப்புக்கள் வழியே இம்மக்களுக்கு உதவ தான் எப்போதும் உற்சாகப்படுத்தி வருவதையும், தன் உரையில் குறிப்பிட்டார்.

புனித பூமியில் ஒருவர் ஒருவருக்கிடையே இணக்க வாழ்வு உருவாக தான் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ROACO அமைப்பினரிடம் கூறினார்.

10 June 2019, 16:22