தேடுதல்

Vatican News
"சிறாரின் இரயில்" என்ற அமைப்புச் சிறாருடன் திருத்தந்தை "சிறாரின் இரயில்" என்ற அமைப்புச் சிறாருடன் திருத்தந்தை  (Vatican Media)

"சிறாரின் இரயில்" என்ற அமைப்புச் சிறாருடன் திருத்தந்தை

ஜெனோவா பள்ளிச் சிறாருடன், பயணத்தைத் தொடங்கிய துரித இரயில், சிவித்தாவெக்கியா நகரில் நின்று, சர்தேஞ்ஞா சிறாரையும், பின்னர் உரோம் இரயில் நிலையத்தில் நின்று, நேப்பிள்ஸ் சிறாரையும் அழைத்துக்கொண்டு வத்திக்கான் வந்தது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

"சிறாரின் இரயில்" என்ற அமைப்பின் முயற்சியால், இத்தாலியின் பல்வேறு நகரங்களிலிருந்து வத்திக்கான் வந்த, ஏறத்தாழ நானூறு சிறாரை, வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில், ஜூன் 08, இச்சனிக்கிழமை முற்பகலில், சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் தேசிய இரயில் துறையின் ஒத்துழைப்புடன், ஜெனோவா, நேப்பிள்ஸ், மற்றும் சர்தேஞ்ஞா தீவுப் பகுதியிலிருந்து, இத்தாலியின் துரித இரயிலில் பயணம் மேற்கொண்டு வந்த சிறாரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் இந்நிகழ்வை நடத்துகின்ற இந்த அமைப்பினர், இவ்வாண்டு, "ஒளியின் கடலில், ஒரு பொன் பாலம்" என்ற தலைப்பில், இந்நிகழ்வை நடத்தினர்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாளன்று, ஜெனோவா நகரின் மொராந்தி பாலம் இடிந்து விழுந்ததில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட மூன்று பள்ளிகளின் சிறாரும் இதில் கலந்துகொண்டனர்.

ஜெனோவா பள்ளிச் சிறாருடன், பயணத்தைத் தொடங்கிய துரித இரயில், சிவித்தாவெக்கியா நகரில் நின்று, சர்தேஞ்ஞா தீவிலிருந்து Moby Tommy என்ற கப்பலில் வந்த சிறாரையும், பின்னர் உரோம் மத்திய இரயில் நிலையத்தில் நின்று, நேப்பிள்ஸ் நகரிலிருந்து வந்திருந்த சிறாரையும் அழைத்துக்கொண்டு வத்திக்கான் வந்தது.

சர்தேஞ்ஞாவிலிருந்து வந்திருந்த சிறார், 2013ம் ஆண்டில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

எல்லாவிதத் தனிமைகளையும் மேற்கொள்வதற்குப் பாலங்களை அமைக்கவும், பிரிவினைச் சுவர்களைத் தகர்த்து அன்புச் சுவர்களை அமைக்கவும், அனைத்து வெள்ளங்கள் மற்றும் சேதங்களால் அன்றாட வாழ்வு பாதிக்கப்படும் சூழலில், அவற்றை எதிர்கொண்டு வாழ்வதற்கும், சிறார்க்கு உதவும் நோக்கத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக, அந்நிகழ்வின் பொறுப்பாளர்கள் அறிவித்தனர்.

08 June 2019, 15:01