தேடுதல்

Vatican News
பேராயர் Léon Kalenga Badikebele அவர்களின் அடக்கத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் பேராயர் Léon Kalenga Badikebele அவர்களின் அடக்கத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

பிரியாவிடை சொல்வதற்கு வாழ்வு கற்றுத் தருகிறது

பேராயர் Badikebele அவர்கள், 1956ம் ஆண்டு காங்கோவில் பிறந்தவர். 1990ம் ஆண்டில் திருப்பீட தூதரகப் பணியில் சேர்ந்த இவர், 2018ம் ஆண்டு, அர்ஜென்டினாவின் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். இவர், ஜூன் 12, உரோம் நகரில், இறைபதம் சேர்ந்தார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நம் சகோதரருக்குப் பிரியாவிடை சொல்வது என்பது, அவர், கடவுளிடம் செல்வதற்கு அனுமதிப்பதாகும், அதாவது, அன்பினால் காயமடைந்த மிக அழகிய கைகளைக் கொண்டிருக்கும் ஆண்டவரின் கரங்களில் அர்ப்பணிப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று மறையுரையாற்றினார்.

நீண்டகாலமாக நோயால் துன்புற்று, இப்புதனன்று இறைபதம் சேர்ந்த அர்ஜென்டீனா நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் Léon Kalenga Badikebele அவர்களின் அடக்கச்சடங்கு கூட்டுத்திருப்பலியை, ஜூன் 15, இச்சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மேய்ப்பர், தனது மந்தையைவிட்டுச் செல்வதை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

புனித பவுல் அவர்கள், எருசலேமுக்குச் செல்வதற்குமுன், மிலேத்துஸ் நகரில் கண்ணீரோடு நின்ற கிறிஸ்தவர்களிடம் பிரியாவிடை சொன்னது போன்று, மேய்ப்பர் தன் மக்களிடம், தனது சாட்சிய வாழ்வால் பிரியாவிடை சொல்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, ஒரு மேய்ப்பர், இவ்வுலகைவிட்டுச் செல்கின்றவேளையில், தனது வாழ்வு, கடவுளுக்குப் பணிந்து நடக்கும் வாழ்வு என்பதை வெளிப்படுத்துகிறார் என்று கூறினார்.

இவ்வுலகைவிட்டுச் செல்வது என்பது, விடுபடுதலுமாகும் என்றும், இது, இவ்வுலகப் பொருள்களில், இவ்வுலகத்தன்மையில் பற்றறுத்து வாழ்வதற்குப் பழகியவர்களின் சான்றாகவும் உள்ளது என்றும் மறையுரையில் உரைத்த திருத்தந்தை, ஒரு மேய்ப்பர், பிரியாவிடை சொல்கின்றவேளை, தனது பணியை மற்றவர்களிடம் விட்டுச் செல்கிறார் என்று கூறினார்.

ஒரு மேய்ப்பர், வாழ்வுக்குப் பிரியாவிடை சொல்வது, இறைவாக்குப்பண்பையும் கொண்டது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அது, தான் சென்றபின்னர், பேராசைபிடித்த குள்ளநரிகள் வருவார்கள், அவர்களிடமிருந்து எவ்வாறு காத்துக்கொள்வது என்பதற்கு வழியைக் காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

பிரியாவிடை சொல்லும் மேய்ப்பர், இறுதியில், உங்களை கடவுளிடம் அர்ப்பணிக்கின்றேன் என்று செபிக்கின்றார், மனித வாழ்வு, பிரியாவிடை சொல்வதற்கு கற்றுத் தருகிறது என்று கூறியத் திருத்தந்தை, இதனைக் கற்றுக்கொள்வதற்கு ஆண்டவர் நமக்கு அருள் வழங்குவாராக என்று சொல்லி, மறையுரையை நிறைவு செய்தார்.

உலகெங்கும், திருத்தந்தையின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும், திருப்பீடத் தூதர்களுக்கென, ஜூன் 12, இப்புதனன்று வத்திக்கானில் துவங்கிய நான்கு நாள் கூட்டம், இச்சனிக்கிழமையன்று நிறைவுற்றது. இதில் கலந்துகொண்ட நூற்றுக்கும் அதிகமான திருப்பீடத் தூதர்கள் எல்லாரும், திருத்தந்தையுடன் சேர்ந்து, இக்கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினர்.

15 June 2019, 14:44