"சுதந்திர வளாகத்தில்" அருளாளர்களாக உயர்த்தும் திருவழிபாட்டில், திருத்தந்தை மறையுரை வழங்குதல் "சுதந்திர வளாகத்தில்" அருளாளர்களாக உயர்த்தும் திருவழிபாட்டில், திருத்தந்தை மறையுரை வழங்குதல் 

"சுதந்திர வளாக" திருவழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை

விசுவாசத்தின் மறைசாட்சிகளான இவர்கள், ருமேனிய மக்களுக்கு விட்டுச் சென்றுள்ள பாரம்பரியத்தை இரு சொற்களால் சுருக்கிக் கூற இயலும்: சுதந்திரம், மற்றும், இரக்கம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" (யோவான் 9:2). அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, சீடர்கள் இயேசுவிடம் கேட்ட இக்கேள்வி, பல செயல்களையும், நிகழ்வுகளையும் துவக்கி வைப்பதுடன், மனித இதயத்தை எது உண்மையிலேயே கட்டிப்போடுகிறது என்பதையும் கூறுகிறது.

விளிம்பில் வாழ்ந்த ஒருவரை, மையத்திற்கு...

இந்த புதுமை, இரு இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ளது; மற்ற இறைவாக்கியங்கள் அனைத்தும், பார்வை பெற்றவரைக் குறித்து அல்ல, மாறாக, அவர் குணமடைந்ததால் உருவான பிரச்சனைகள், விவாதங்கள், கோபம், ஆகியவை குறித்து பேசுகின்றன.

சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்த ஒருவரை அதன் மையத்திற்கு கொணர்ந்த இயேசுவின் செயல்களையும், அவரது முன்னுரிமைகளையும் புரிந்துகொள்வது எவ்வளவு கடினம் என்பதை இந்த நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. மக்களுக்கு முன்னுரிமை வழங்காமல், ஒருவரின் விருப்பங்கள், கருத்தியல்கள், அடையாள வில்லைகள் ஆகியவை கொண்டு, மக்களை கட்டிப்போடும் நம் மனித மனதில் எழும் பகைமை உணர்வுகளை இங்கு காண்கிறோம்.

ஆண்டவரின் அணுகுமுறை

ஆண்டவரின் அணுகுமுறை வேறுபட்டது: வெறும் கருத்தியல்களுக்கு பின்னே செயலற்று போவதற்குப் பதில், இயேசு, மக்களை நேருக்கு நேர் பார்க்கிறார். அவர்களிடம் உள்ள காயங்களை, அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறார். வெறுமையான விவாதங்களால் திசை மாறிச் செல்லாமல், மக்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் செல்கிறார்.

அடக்குமுறையை எதிர்த்த அருளாளர்கள்

மக்கள் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க இயலாமல், அவர்களது மத நம்பிக்கையையும், வாழ்வையும் கட்டுப்படுத்தும் ஒரு கருத்தியல் ஆதிக்கம் செலுத்தும்போது, மக்கள் எவ்வளவு தூரம் துன்புறுவர் என்பதை, இந்நாடு நன்கு அறிந்துள்ளது. குறிப்பாக, இங்கு நான் அருளாளர்களாக உயர்த்திய ஏழு கிரேக்க கத்தோலிக்க ஆயர்களை சிறப்பான முறையில் எண்ணிப்பார்க்கிறேன். அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, அவர்கள் தங்கள் நம்பிக்கையையும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பையும் வெளிப்படுத்தினர். தாங்கள் அன்புகூர்ந்த திருஅவை மீது கொண்டிருந்த விசுவாசத்திற்காக, அவர்கள், தங்கள் சிறை தண்டனையையும், வேறுபல இன்னல்களையும், உள்ளார்ந்த உறுதியோடும், துணிவோடும் ஏற்றுக்கொண்டனர். விசுவாசத்தின் மறைசாட்சிகளான இவர்கள், ருமேனிய மக்களுக்கு விட்டுச் சென்றுள்ள பாரம்பரியத்தை இரு சொற்களால் சுருக்கிக் கூற இயலும்: சுதந்திரம், மற்றும், இரக்கம்.

அருளாளர்களின் சுதந்திரம்

சுதந்திரம் என்று சொல்லும்போது, நாம் இந்த வழிபாட்டினை, "சுதந்திர வளாகத்தில்" கொண்டாடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். பல்வேறு மத நம்பிக்கையின் வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், இவ்விடம், சுதந்திரத்திற்காக மக்களை ஒருங்கிணைத்தது என்பதை மறுக்க இயலாது. இறைநம்பிக்கையற்ற ஓர் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, நம் அருளாளர்கள், தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்டினர். அந்த துன்பம் நிறைந்த அடக்குமுறை காலத்தில், கிரேக்க கத்தோலிக்க திருஅவை, மற்றும் இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த பொதுநிலையினரும், ஆயர்களும் துன்பங்களைத் தாங்கினர்.

அருளாளர்களின் இரக்கம்

நமது அருளாளர்கள் விட்டுச்சென்ற மற்றொரு பாரம்பரியம், இரக்கம். தங்களைத் துன்புறுத்தியோர் மீது வெறுப்பைக் காட்டாமல் அன்பை காட்டியவர்கள், இந்த அருளாளர்கள். தன் சிறை வாழ்வின்போது, ஆயர் Iuliu Hossu அவர்கள் கூறிய சொற்கள் மிக அழகானவை: "மன்னிப்பு வழங்கி, அனைவரின் மனம் திரும்பலுக்காக செபிப்பதற்கென, இறைவன் எங்களை இந்த துன்பத்தின் இருளுக்கு அனுப்பியுள்ளார்".

இவர்கள் காட்டிய இரக்கம் நமக்கு ஒரு செய்தியாக வந்து சேருகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது கோபத்தை, அன்பாலும், மன்னிப்பாலும் வெல்வதற்கு அருளாளர்கள் காட்டிய இரக்கம் அழைப்பு விடுக்கிறது.

புதிய கருத்தியல் திணிப்புகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்றும், நமது செறிவுமிக்க கலாச்சார, மத பாரம்பரியங்களிலிருந்து நம்மை வேரோடு வெட்டியெடுக்க, பல புதிய கருத்தியல்கள் முயன்று வருகின்றன. மனித மாண்பு, வாழ்வு, திருமணம், குடும்பம் என்ற பல பாரம்பரியங்களின் மதிப்பைக் குறைத்து, குழந்தைகளையும், இளையோரையும் வேரற்றவர்களாக மாற்றும் கருத்தியல்கள் உலகில் உள்ளன.

நமது அருளாளர்கள் செய்ததுபோல், நற்செய்தியின் ஒளியை நம் சமகாலத்தவருக்கு கொணர்ந்து, நாளொன்றுக்கு தோன்றும் புதிய கருத்தியல்களைத் தடுக்க உங்களை நான் ஊக்குவிக்கிறேன். சுதந்திரம், இரக்கம் ஆகியவற்றிற்கு நீங்கள் சாட்சிகளாக வாழ்ந்து, அனைத்து பிரிவுகளையும் இணைக்கும் சக்தியாக விளங்குவீர்களாக. அன்னை மரியாவின் பாதுகாப்பும், புதிய அருளாளர்களின் பரிந்துரையும் உங்கள் பயணத்தில் துணை வருவனவாக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2019, 14:28