தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாத் திருப்பலியை புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாத் திருப்பலியை புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இணக்கத்தைக் கொணர்வது இறைவனின் அமைதி

அகந்தைக்குத் தாழ்ச்சியினாலும், தீமைக்கு, நன்மையாலும், கோபக்குரல்களுக்கு, அமைதியாலும், புறஞ்சொல்வோருக்கு, செபத்தாலும், தோல்விகளுக்கு, ஊக்கமளிக்கும் வார்த்தைகள் வழியாகவும் பதிலளிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்த்த இயேசுவைக் கண்டு, அவரோடு அமர்ந்து உணவருந்திய பின்னரும், வருங்காலம் குறித்த சந்தேகங்களுடனேயே வாழ்ந்த சீடர்களிடையே, தூய ஆவியார் இறங்கி வந்த பின்னரே, அவர்களின் கவலைகள் அனைத்தும் களையப்பட்டன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மறையுரையில் கூறினார்..

ஜூன் 9, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட பெந்தகோஸ்து திருவிழாவையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் மரணத்திற்குப்பின், தங்கள் உயிர் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த சீடர்கள், தூய ஆவியாரின் வருகைக்குப்பின் தங்கள் உயிரையும் கையளிக்கத் தயங்காத துணிவு பெற்றுள்ளதைக் காண்கிறோம் என்றார்.

அச்சத்தில் வாழ்ந்த சீடர்கள், தூய ஆவியாரின் வருகைக்குப்பின் தங்களுள் இளம் இரத்தம் பாய்ச்சப்பட்டவர்களாக உணர்ந்தனர், அதே தூய ஆவியானவர்தாம் இப்போதும் நம் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்கிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சீடர்களின் வாழ்வை இலகுவானதாகவோ, அவர்களின் வாழ்வில் பெரிய அற்புதங்களையோ, அவர்களின் துன்பங்களையும் எதிரிகளையும் அகற்றிவிடும் பணியையோ, தூய ஆவியார் நிகழ்த்தவில்லை, மாறாக, அவர்களின் வாழ்வில் குறைவுபட்டிருந்த இணக்கத்தைக் கொணர்ந்ததன் வழியாக, அருஞ்செயல்கள் ஆற்ற உதவினார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசுவைக் கண்டால் மட்டும் போதாது, அவரை நம் இதயத்தில் பெற்று, அவரைப்போல் நாமும் உயிர்த்தவர்களாக, மனிதர்களுடன் இணக்கத்தில் வாழவேண்டியது அவசியம் என்றார்.

நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அமைதி என்பது, ஆழமான இணக்க வாழ்வாகும், அது நமக்குள் மட்டுமல்ல, நம்மிடையேயும் இணக்கத்தைக் கொணர்வதாகும் எனவும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு விதமான கொடைகளை வழங்கும் தூய ஆவியார், அவற்றின் அடிப்படையில் ஒன்றிப்பை கட்டியெழுப்புகிறார், ஏனெனில், இணக்க வாழ்வை உருவாக்குவதில் அவரே வல்லுனர் எனவும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இணக்க வாழ்வின்மையாலேயே பிரிவினைகள் அதிகரிக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகந்தைக்குத் தாழ்ச்சியினாலும், தீமைக்கு, நன்மையாலும், கோபக்குரல்களுக்கு, அமைதியாலும், புறஞ்சொல்வோருக்கு, செபத்தாலும், தோல்விகளுக்கு, ஊக்கமளிக்கும் வார்த்தைகள் வழியாகவும் பதிலளிப்போம், என கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2019, 16:19