D-Day நிகழ்வின் 75ம் ஆண்டு நிறைவு D-Day நிகழ்வின் 75ம் ஆண்டு நிறைவு 

D-Day படைவீரர்களின் துணிச்சலுக்கு திருத்தந்தை பாராட்டு

1944ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Normandy யிலும், ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும், நட்பு நாடுகள் எடுத்த தீர்மானம், இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு வழியமைத்தது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இரண்டாம் உலகப்போரின் முக்கிய தருணமாகக் கருதப்படும் D-Day நிகழ்வு இடம்பெற்றதன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, செய்தி அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விடுதலை மற்றும் அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துப், போராடிய படைவீரர்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.

நாத்சிகளின் கொடுமைகளுக்கு எதிரான போரை  நிறுத்துவதற்கு, 1944ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதியன்று, நட்பு நாடுகள், பிரான்ஸ் நாட்டின் Normandy யிலும், ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் தீர்மானம் எடுத்ததைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இத்தீர்மானம், இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு வழியமைத்தது என்று கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த படைவீரர்கள் மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் ஆன்மாக்கள், நிறைசாந்தியடையவும் தான் செபிப்பதாக, திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 6, இவ்வியாழனன்று, இந்த 75ம் ஆண்டு நிறைவு திருப்பலியை நிறைவேற்றிய, பிரான்ஸ் நாட்டின் Bayeux-Lisieux ஆயர் Jean-Claude Boulanger அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய இச்செய்தியை வாசித்தார்.  

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த 16 நாடுகள், இனி, இவ்வுலகம், இதுபோன்ற போரை சந்திக்கப்போவதில்லை என்ற உறுதியுடன், 1944ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி, இணைந்து கையொப்பமிட்டதை நினைவுகூரும் D-Day கொண்டாட்டங்கள், பிரான்ஸ், மற்றும் பிரித்தானியாவில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டன.

இரஷ்ய அரசுத்தலைவர் புட்டின்

மேலும், இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமீர் புட்டின் அவர்கள், வருகிற ஜூலை 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடுவார் என்று, திருப்பீட இடைக்கால செய்தித் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு நவம்பர் 25, 2015ம் ஆண்டு ஜூன் 10 ஆகிய இரு நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ள, அரசுத்தலைவர் புட்டின் அவர்கள், மூன்றாவது முறையாக, வருகிற ஜூலை 4ம் தேதி திருத்தந்தையை சந்திக்கவுள்ளார்.

இதற்கிடையே, இரண்டாயிரமாம் ஆண்டிலும், 2003ம் ஆண்டிலும், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களையும், 2007ம் ஆண்டில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார், அரசுத்தலைவர் புட்டின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2019, 15:40