தேடுதல்

Vatican News
பனிச்சறுக்கு கலைஞர்களின் அனைத்துலகக் கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பனிச்சறுக்கு கலைஞர்களின் அனைத்துலகக் கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் திருத்தந்தை  (ANSA)

விளையாட்டுக்கள், மகிழ்வின் வெளிப்பாடாக உள்ளன

பிறரை மதித்தல், மனவுறுதி, பொதுநலப் பண்பு, சமநிலைக் காத்தல், தன்னையே கட்டுப்படுத்துதல் என்பவை, விளையாட்டுக்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் நற்பண்புகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பனிச்சறுக்கு கலைஞர்களின் அனைத்துலகக் கழகம், அவ்விளையாட்டின் அழகை அனுபவிக்கும்படி மக்களை ஊக்குவிப்பதை தங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பது குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பனிச்சறுக்கு கலைஞர்களின் அனைத்துலகக் கழகத்தைச் சேர்ந்த 32 பிரதிநிதிகளை ஜூன் 13, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து விளையாட்டுக்களும் மகிழ்வின் காரணமாகவும், அம்மகிழ்வின் வெளிப்பாடாகவும் உள்ளன என்ற நிலையில், பனிச்சறுக்கு விளையாட்டும், சுதந்திர இயக்கத்திற்கும், ஒன்றிணைந்து பயிற்சி பெறுவதற்கும் உதவுகின்றது என கூறினார்.

பாரம்பரியமாகவே, பனிச்சறுக்கு விளையாட்டு, எல்லா சமூக எல்லைகளையும்  அகற்றியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளதென மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய இளையோர் தங்கள் விளையாட்டுக்களின் வழி சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக செயல்பட, பழைய அங்கத்தினர்களின் வழிகாட்டுதல் உதவும் என்ற நம்பிக்கையையும், தன்னை காண வந்திருந்த பிரதிநிதிகளிடம் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பிறரை மதித்தல், மனவுறுதி, பொதுநலப் பண்பு, சமநிலைக் காத்தல், தன்னையே கட்டுப்படுத்துதல் என, விளையாட்டுக்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் நற்பண்புகள், வாழ்க்கையைச் சந்திக்க உதவியாக உள்ளன என எடுத்துரைத்தார்.

மேலும், இவ்வியாழனன்று தான் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், ‘தூய ஆவியாரே, இணக்க வாழ்வின் கலைஞர்களாகவும், நன்மைத்தனத்தை விதைப்பவர்களாகவும், நம்பிக்கையின் திருத்தூதர்களாகவும் எம்மை உருவாக்கியருளும்' என்ற வேண்டுதலை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 13, இவ்வியாழனன்று வறியோர் உலக நாள் செய்தி வெளியான நிகழ்வையடுத்து, வறியோரை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"ஏழைகள் நம்மைக் காப்பாற்றுகின்றனர், ஏனெனில், இயேசு கிறிஸ்துவின் முகத்தை நாம் காண்பதற்கு அவர்கள் நமக்கு உதவுகின்றனர்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

13 June 2019, 15:41