புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

வலுவிழந்தோருக்கு உதவுவது, நீதிபதிகளின் பொறுப்பு

அரசியல்வாதிகளின் ஆதிக்கமும், ஊடகங்களின் செயல்பாடுகளும் பெருமளவு ஊடுருவியிருப்பதால், நீதிபதிகள், நடுநிலையோடு தீர்ப்பு வழங்க இயலாமல் போகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதகுலத்தின் ஆன்மாவைப் பறிகொடுக்கும் ஆபத்தில் இன்றைய சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து அமெரிக்க நீதிபதிகளிடம் கூறினார்.

ஜூன் 3, 4 ஆகிய இருநாள்கள், வத்திக்கானில் நடைபெற்ற அனைத்து அமெரிக்க நீதிபதிகள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட 100க்கும் அதிகமான பிரதிநிதிகளை இச்செவ்வாய் மாலை சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய இறுதி உரையில் இவ்வாறு கூறினார்.

நுணுக்கமான சட்டங்கள் பெருகினாலும்...

இஸ்பானிய மொழியில் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நுணுக்கமான பல சட்டங்கள் உலகெங்கும் பெருகிவந்தாலும், அடிப்படையில் மதிக்கப்படவேண்டிய மனித உரிமைகள் பறிக்கப்பட்டு வருவது, வேதனை நிறைந்த புதிராக உள்ளது என்று கூறினார்.

உலகின் அனைத்து நாடுகளிலும், நீதிகிடைக்காமல் தவிப்பதில் பெரும்பாலானோர் வறியோர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோரின் காலணிகளில் நம்மையே பொருத்திப் பார்க்கவேண்டும் என்ற வழக்கமான சொற்றொடரைப் பயன்படுத்திய அதே மூச்சில், வறியோருக்குக் காலணிகளும் கிடையாது என்பதை எடுத்துரைத்தார்.

நீதித்துறை சந்திக்கும் சவால்கள்

நீதித்துறை எடுக்கவேண்டிய முடிவுகளில், அரசியல்வாதிகளின் ஆதிக்கமும், ஊடகங்களின் செயல்பாடுகளும் பெருமளவு ஊடுருவியிருப்பதால், நீதிபதிகள், நடுநிலையோடு தீர்ப்பு வழங்க இயலாமல் போகிறது எனபதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில், வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நீதிபதிகளின் பங்கு

மனித சமுதாயத்தில் மிகவும் வலுவிழந்து நிற்கும் மக்களுக்கு உதவுவது, நீதிபதிகள் முன் இருக்கும் மிகப்பெரும் பொறுப்பு என்று திருத்தந்தை தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்.

தனி மனித மாண்பை முதன்மைப்படுத்தி, நீதியை நிலைநிறுத்தும் மிகக் கடினமானப் பணியை ஆற்றுவதற்கு, துணிவுடன் செயல்படுவதன் வழியே, சமுதாய மாற்றங்களைக் கொணரும் சிற்பிகளாக நீதிபதிகள் மாறமுடியும் என்று திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

சமுதாய உரிமைகளும், பிரான்சிஸ்கன் கொள்கையும் என்ற தலைப்பில், சமூகவியல் பாப்பிறைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அனைத்து அமெரிக்க நீதிபதிகளின் உச்சி மாநாட்டில், 100க்கும் அதிகமான நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2019, 15:03