புதன் மறைக்கல்வி உரைக்கு வந்திருந்த கடற்படை வீரர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரைக்கு வந்திருந்த கடற்படை வீரர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை மறைக்கல்வியுரை : 'நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள்'

தூய ஆவியாரே படைப்பனைத்தையும் புதுப்பிக்கிறார், இதயங்களில் குடிகொள்கிறார், பன்மையில் ஒன்றிப்பை கட்டியெழுப்புகிறார், ஒப்புரவையும் கூட்டுறவையும் கொணர்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகரிலும், கோடைக்கால வெயிலின் தாக்கம் ஓரளவு இருக்கின்றபோதிலும், திருப்பயணிகளின் பெரும் எண்ணிக்கையை மனதில் கொண்டு, திறந்த வெளியிலேயே, அதாவது புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்திலேயே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைக்கல்வியுரை இடம்பெற்றது.

திருத்தூதர் பணிகள் நூல் பற்றிய தன் புதிய மறைக்கல்வித் தொடரை சில வாரங்களுக்கு முன்னர் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீடர்கள் மற்றும் அன்னை மரியா மீது தூய ஆவியார் இறங்கி வந்ததைக் குறித்து உரையாற்றினார். 'நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள்' என்பது, இப்புதன் மறைக்கல்வியுரையின் தலைப்பாக இருந்தது.

முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் 2வது பிரிவிலிருந்து, பின்வரும் பகுதி வாசிக்கப்பட்டது: பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள் (தி.ப. 2,1-4). இவ்வாசகத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை தன் உரையைத் துவக்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் பற்றிய நம் மறைக்கல்வி உரையில் இன்று, இயேசுவின் சீடர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்தது குறித்து நோக்குவோம். இயேசுவின் தாயாம் அன்னை மரியாவோடு, இயேசுவின் சீடர்கள், மேல்மாடியில், செபத்தில் ஒன்றுகூடி இருந்தபோது, தூய ஆவியார், அவர்கள் மீது இறங்கி வந்தார். இயேசு வழங்கிய வாக்குறுதி நிறைவேறும் விதமாக, தூய ஆவியார் இறங்கி வந்தது, கொடுங்காற்று மற்றும் நெருப்புப்போன்ற நாக்குகளுடன் இணைந்ததாக இருந்தது. பெந்தகோஸ்து நாளின்போது இடம்பெற்ற இந்த அடையாளங்கள், சீனாய் மலையில், பத்து கட்டளைகளை மோசேயிடம் கையளித்தபோது, எரியும் முட்புதரில், இறைவன் தன்னையே வெளிப்படுத்தியதை நினைவுக்குக் கொணர்கின்றன. இவ்வாறு, திருஅவை, இறைவனின் அன்பெனும் நெருப்பிலிருந்தும், அவரின் வார்த்தைகளின் சக்தியிலிருந்தும் பிறப்பெடுப்பதைக் காண்கிறோம். தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவராக, புனித பேதுரு, உடனடியாக, நற்செய்தியை அறிவிக்கும் திருஅவைப் பணியைத் துவக்கினார். உயிர்த்த கிறிஸ்துவைக் குறித்து மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்து, விசுவாசத்திற்கும் மனந்திரும்பலுக்கும் அழைப்பு விடுத்தார்.

பெந்தகோஸ்து நாளின்போது தூய ஆவியார் கணக்கற்ற விதத்தில் வாரி வழங்கப்பட்டார். இது, புதிய மற்றும் முடிவற்ற உடன்படிக்கையின் இதயம் என்பது, சட்டத்தின் எழுத்து வடிவிலான வார்த்தைகள் அல்ல, மாறாக, தூய ஆவியாரின் இருப்பே என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. தூய ஆவியாரே படைப்பனைத்தையும் புதுப்பிக்கிறார், நம் இதயங்களில் குடிகொள்கிறார், பன்மையில் ஒன்றிப்பை கட்டியெழுப்புகிறார், மற்றும், எல்லா இடங்களிலும் ஒப்புரவையும் கூட்டுறவையும் கொணர்கிறார். நாமும் ஒரு புதிய பெந்தகோஸ்து அனுபவத்தைப் பெறும்பொருட்டு நம்மை, தூய ஆவியார் வழிநடத்தி, உயிர்த்த இயேசுவுக்கு நாம் மகிழ்ச்சி நிறைந்த, அதேவேளை, நம்பத் தகுந்த சாட்சிகளாக மாறுவதற்கு உதவுவாராக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளை மறு நாள், அதாவது, ஜூன் 21, வெள்ளியன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித அலோசியஸ் கொன்சாகாவின் திருவிழா குறித்தும் எடுத்துரைத்து, நற்செய்தி காட்டும் எளிமையிலும், புனிதத்திலும் வாழ்ந்த அப்புனிதரின் எடுத்துக்காட்டு, இயேசுவுடன் மிக நெருங்கிய நட்புணர்வை கட்டியெழுப்ப நமக்கு உதவுவதாக எனக் கூறினார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2019, 11:40