காமெரீனோ நகரில் திருத்தந்தை காமெரீனோ நகரில் திருத்தந்தை 

காமெரீனோ நகரில் திருத்தந்தையின் மூவேளை செப உரை

போராலும், அடிப்படை உரிமை மீறல்களாலும் பாதிக்கப்பட்டு, புலம் பெயர்ந்தோராக மாறியுள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை சிறப்பான விதத்தில் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 15, கடந்த சனிக்கிழமையன்று இத்தாலியின் சார்தீனியாவில் அருளாளராக உயர்த்தப்பட்ட இறையடியார் எத்வீஜே கார்போனி (Edvige Carboni) அவர்களின் நம்பிக்கை மற்றும் பிறரன்பின் எடுத்துக்காட்டை முன்வைத்து, ஜூன் 16, இஞ்ஞாயிறன்று தன் மூவேளை செப உரையைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2016ம் ஆண்டு, நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வாழும் காமெரீனோ நகர மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியபின், வழங்கிய மூவேளை செப உரையில், இறையடியார் கார்போனி அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும், இறைவனுக்கும், அயலவருக்கும் பணியாற்றுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் என்று கூறினார்.

மேலும், ஜூன் 20, வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் குறித்தும் தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போராலும், அடிப்படை உரிமை மீறல்களாலும் பாதிக்கப்பட்டு, புலம் பெயர்ந்தோராக மாறியுள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் குறித்து சிறப்பான விதத்தில் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது என்று கூறினார்.

பாரசீக வளைகுடாப் பகுதியில் தற்போது எழுந்துள்ள பதட்டமான சூழல் குறித்தும், தன் மூவேளை செப உரையில், கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடுகளிடையே, உரையாடலையும், அமைதியையும் ஊக்குவித்து, பேணிக் காக்கவேண்டிய கடமையையும் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2019, 13:00