தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை 290619 மூவேளை செப உரை 290619  (Vatican Media)

பொறாமை, வாழ்வை கசப்பானதாக ஆக்குகிறது

புனித பேதுரு, இன்று நம் எல்லாரையும் நோக்கி, “எனது திருஅவை, நீங்கள் எனது திருஅவை” என்று சொல்கிறார். நமது உடன்பிறந்த அன்பால், “எனது திருஅவை” எனச் சொல்வோம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஜூன் 29, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் மற்றும் பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரையும் மையப்படுத்தி உரையாற்றினார்.

புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரும், திருஅவையின் கட்டடத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களாகப் படங்களில் பார்க்கையில், அது, இயேசு, பேதுருவிடம் உரைத்த, உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத்.6,18) என்ற. இந்நாளைய நற்செய்திப் பகுதியையே நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை கூறினார்.

இயேசு முதல்முறையாக திருஅவை என்று சொல்கிறார், இயேசு, இங்கே, திருஅவை மீது கொண்டிருக்கும் மாபெரும் அன்பை வெளிப்படுத்துகிறார், அதனை, ‘எனது திருஅவை’ எனச் சொல்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, நாமும், எனது திருஅவை என்று சொல்வோம் என்று கூறினார்.

திருத்தூதர்கள் போன்று, நாமும், ‘எனது திருஅவை’க்கு, உடன்பிறந்த அன்புணர்வோடு ஆதரவளிக்க வேணடும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரும், ஒருவரையொருவர் கட்டித்தழுவுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள படம் பற்றியும் விளக்கினார்.

இவ்விரு புனிதர்களும், ஒருவர் மற்றவரிலிருந்து வேறுபட்டு இருந்தாலும், ஆண்டவராம் இயேசுவே இவர்களை ஒன்றிணைத்தவர் என்றும், ஒருவர், நம்மைவிட குணங்களில் வேறுபட்டு இருந்தாலும், எவ்விதப் பொறாமையுமின்றி, அவர்களின் திறமைகளை ஏற்று, அவர்கள், ‘எனது திருஅவை’யின் கொடை என்று கருத வேண்டுமென திருத்தந்தை கூறினார்.

நமது திருஅவையை அன்புகூர்வதற்கும், திருஅவையில், ஒருவர் ஒருவரை, சகோதரர், சகோதரிகளாக நோக்கும் கண்களையும், இயேசு நமக்காக வைத்திருக்கும் கனிவான அன்போடு மற்றவரை வரவேற்கும் இதயத்தையும் கொண்டிருப்பதற்கும், இந்த திருத்தூதர்களின் பரிந்துரைகளைக் கேட்போம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மைப் போன்று சிந்திக்காதவர்களுக்காகச் செபிக்கவும், அன்புகூரவும், புறங்கூறாமல் இருக்கவும் சக்தியைத் தருமாறும் வரம் வேண்டுவோம் என்றுரைத்த திருத்தந்தை, திருத்தூதர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கொணர்ந்து, அவர்களுடன் சேர்ந்து செபித்த, அன்னை மரியா, திருஅவையில், நம்மை, சகோதரர், சகோதரிகளாகப் பாதுகாப்பாராக என்றுரைத்து, மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

 

29 June 2019, 13:00