நேப்பிள்ஸ் நகரில்  திருத்தந்தை பிரான்சிஸ் நேப்பிள்ஸ் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறையியலாளர்கள், கலாச்சாரங்களின் சந்திப்பை ஊக்குவிக்க அழைப்பு

இறையியலாளர்கள், திருஅவையின் வெளிப்பாடுகளாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் வாழ வேண்டுமெனவும், இரக்கப் பண்பின்றி, நம் இறையியலும், சட்டமும், மேய்ப்புப்பணியும், கருத்தியலில் சிக்கும் ஆபத்தை எதிர்கொள்ளும் எனவும், திருத்தந்தை கூறினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

“மத்திய தரைக் கடல் சூழலில், உண்மையின் மகிழ்வு திருத்தூது கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டதற்குப் பின்னர் இறையியல்” என்ற தலைப்பில், நேப்பிள்ஸ் நகரில் நடைபெற்ற இறையியல் கருத்தரங்கில், ஜூன் 21, இவ்வெள்ளியன்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலந்துரையாடல், கிறிஸ்தவ நற்செய்தியை அறிவித்தல் ஆகிய இரு முக்கிய கூறுகளை மையப்படுத்தி தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஏற்றுக்கொள்ளல் மற்றும் உறையாடலின் இறையியல், உபசரிப்பின் இறையியலுக்கு உரையாடலின் எடுத்துக்காட்டுகள், உபசரிப்பின் இறையியல் என்பது, செவிமடுத்தலின் இறையியல், பல்வேறு கல்வித்துறைகளின் இறையியல் போன்ற தலைப்புகளில் நீண்ட உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறந்து உயிர்த்த கிறிஸ்துவை அறிவிப்பது, நற்செய்தி அறிவிப்புப் பணியை மையப்படுத்தும் திருஅவையின் கல்வியைப் புதுப்பிப்பதற்கு உந்துசக்தியாக உள்ளது என்றும், உரையாடல் என்பது, தெளிந்துதேர்வு செய்தல் மற்றும் நற்செய்தி அறிவிப்புக்கு வழியாகும் என்றும், திருத்தந்தை கூறினார்.

உரையாடலும், நற்செய்தி அறிவிப்பும், கடவுளின் அன்பை அனைத்து மனிதருக்கும் சான்று பகர்வதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் வாழ்ந்து காட்டியுள்ளார் என்றும், இதற்கு, தூய ஆவியாரின் குரலுக்குப் பணிந்து நடக்க வேண்டியது அவசியம் என்றும் திருத்தந்தை கூறினார்.

மக்களுடனும், கலாச்சாரங்களுடனும் உரையாடல் நடத்துவதற்கு, Charles de Foucauld போன்று, ஒருவர் தன் வாழ்வைத் தியாகம் செய்து சான்றுபகரும் நிலையும் தேவைப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்தி எவ்வாறு வாழ்ந்து காட்டப்பட வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.

உரையாடல், தெளிந்துதேர்தல், ஒத்துழைப்பு, தனிமனிதக் கோட்பாட்டைத் தவிர்த்து, கூட்டாக இணைந்து பணியாற்றுதல் போன்றவை, இயேசுவால் அறிவிக்கப்பட்ட நற்செய்தியின்படி வாழ்வதற்கு உதவுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, உரையாடல் மற்றும் இரக்கப் பண்பின் வழியாக வரவேற்கும் பண்பை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய தரைக் கடல், புவியியல் மற்றும் கலாச்சார இடமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

இறையியல், கள மருத்துவமனையாகிய திருஅவையின் வெளிப்பாடு என்றும், இத்திருஅவை, உலகில் மீட்பு மற்றும் குணமாக்கும் பணியில் வாழ்கின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இரக்கம், மேய்ப்புப்பணி கண்ணோட்டம் மட்டுமல்ல, இயேசுவின் நற்செய்தியின் சாரமுமாகும் என்றும் கூறினார்.

குருத்துவ மாணவர்கள் மட்டுமல்லாமல், பொதுநிலையினர், குறிப்பாக, பெண்களை அனுமதிக்கும் கல்விக்கூடங்களாக பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு,  கல்வித்திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2019, 14:55