தேடுதல்

2018 உலக வறியோர் தினத்தில் ஏழைகளுடன் உணவருந்திய திருத்தந்தை 2018 உலக வறியோர் தினத்தில் ஏழைகளுடன் உணவருந்திய திருத்தந்தை 

வறியோர் உலக நாளுக்கு திருத்தந்தையின் செய்தி

குப்பைத் தொட்டிகளில் தங்கள் வாழ்வின் தேவைகளைத் தேடும் மனிதரை, இவ்வுலகம் குப்பை என்று ஒதுக்குவது பெரும் கொடுமை – திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 13, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட பதுவை நகர் புனித அந்தோனியார் திருநாளன்று, இவ்வாண்டு நவம்பர் 17ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் வறியோர் உலக நாளுக்குரிய செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ளார்.

பத்து எண்ணிக்கைகள் கொண்ட திருத்தந்தையின் செய்தி

"எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது" (தி.பா. 9:18) என்ற சொற்களை தலைப்பாகக் கொண்டு, திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தி, பத்து எண்ணிக்கைகள் கொண்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

திருப்பாடலின் ஆசிரியர், அவர் காலத்தில் வாழ்ந்த வறியோர் எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதை, 9ம் திருப்பாடலில் விவரித்துள்ளார் என்று இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், செல்வந்தர், வறியோர் என்ற இரு நிலைகளுக்கிடையே நிலவும் கொடுமைகள் அதே நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார்.

வறுமை ஒரு குற்றமல்ல

இன்றைய உலகில், அனாதைகள், வீடற்றோர், புலம்பெயர்ந்தோர் என்று, அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களில் வாடும் மனிதர்கள் உள்ளனர் என்று கூறும் திருத்தந்தை, வறுமை என்ற நிலையில் பிறந்தவர்களை, அது, அவர்கள் இழைத்த குற்றம் என்ற கண்ணோட்டத்தில் இவ்வுலகம் காண்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வீடற்றோர் பலர், ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டிகளில் தங்கள் வாழ்வின் தேவைகளான உணவு, உடை ஆகியவற்றைத் தேடும் காட்சியை இப்பகுதியில் விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மனிதரை, இவ்வுலகம் குப்பை என்று ஒதுக்குவது பெரும் கொடுமை என்று குறிப்பிட்டுள்ளார்.

'இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்கள்'

வறியோருக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைக்கும் திருப்பாடல் ஆசிரியர், அதே நேரம், வறியோர், 'இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்கள்' என்ற ஓர் இலக்கணத்தை வறியோருக்கு வழங்கியுள்ளார் என்று இச்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார், திருத்தந்தை.

வறியோர் சார்பில் ஆண்டவர் செயலாற்றுகிறார் என்பதை, விவிலியம் நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்தி வருகிறது என்பதை சிறப்பாகக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோரை இறைவன் ஒருபோதும் மறப்பதில்லை என்பதையும், அவர்கள் மீது அக்கறை கொண்டு, நீதியை நிலைநாட்டுகிறார் என்பதையும் பல்வேறு திருப்பாடல்களின் வரிகள் வழியே நினைவுறுத்துகிறார்.

சுவர்கள் அனைத்தும் தகர்ந்துவிடும்

செல்வந்தர்கள், தங்கள் செல்வத்தில் பாதுகாப்பையும், சுகத்தையும் காண்பதற்காக எத்தனையோ சுவர்களை எழுப்பினாலும், ஆண்டவரின் நாள் வரும்போது, இந்தத் தடைச் சுவர்கள் அனைத்தும் தகர்ந்துவிடும் என்று திருத்தந்தை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தான் வாழ்ந்த காலத்தில் இயேசு தன்னையே, வறியோருடன் அடையாளப்படுத்திக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை என்பதை, இச்செய்தியின் ஐந்தாவது பகுதியில் கூறும் திருத்தந்தை, "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத். 25:40) என்ற சொற்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்"

அதேவண்ணம், பேறுபெற்றோர் என்ற வரிசையில், இயேசு அறிமுகப்படுத்திய முதல் சொற்களிலேயே, "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே" (லூக். 6:20) என்று கூறியதை திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழைகளை மையப்படுத்தி, இறையரசை அறிமுகப்படுத்திய இயேசு, அந்த இறையரசுப்பணியை தன் சீடர்களிடம் ஒப்படைத்த வேளையில், வறியோருக்கு நம்பிக்கை தருவதை ஒரு முக்கியப் பணியாக விட்டுச்சென்றார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வறியோருடன் நெருங்கியிருப்பதே திருஅவையின் முக்கியப் பணி என்பதை, இச்செய்தியின் ஆறாம் பகுதியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறுமையுற்று, காயமுற்று இருக்கும் இயேசுவின் உடலைத் தொடுவது நாம் ஆற்றக்கூடிய தலைசிறந்த பணி என்பதை எடுத்துரைத்துள்ளார்.

அடுத்த வீட்டுப் புனிதர் Jean Vanier

வறியோருடன் தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டு, அவர்களுக்காக வாழ்ந்த Jean Vanier அவர்களைப் பற்றி இப்பகுதியில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, வறியோரின் திருத்தூதராகவும், நமக்கு அடுத்த வீட்டுப் புனிதராகவும், இவ்வுலகில் வாழ்ந்த Vanier அவர்களின் அண்மைய மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

வறியோரின் உலக நாளில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாள் நிகழ்வுகளிலும், வறியோருடன் நம்மையே இணைத்துக்கொள்வது கிறிஸ்தவர்களின் அர்ப்பணத்தைக் காட்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அன்புடன் கவனம் செலுத்துவது, உண்மையான அக்கறையின் துவக்கம்" (நற்செய்தியின் மகிழ்வு 199) என்ற சொற்களை மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளார்.

அக்கறை கொண்ட கண்கள், நீட்டிய கரங்கள்

வறியோர் உலக நாளையொட்டி, தங்கள் பணிகளை அர்ப்பணிக்கும் தன்னார்வத் தொண்டர்கள், நம் கவனத்திற்குரியவர்கள் என்று கூறும் திருத்தந்தை, நம்மிடையே எழுந்துள்ள பல்வேறு நிலைப்பாடுகளையும், அவற்றின் வழியே வெளிப்படுத்தப்படும் சொற்களால் ஆன வெள்ளத்தையும் மறந்து, அக்கறை கொண்ட கண்களுடனும், நீட்டிய கரங்களுடனும் வறியோரை அணுகிச் செல்வோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நம்பிக்கை தரும் சிறு விடயங்கள்

வறியோருக்கு நம்பிக்கை தருவதற்கு சிறு விடயங்கள் போதும் என்பதை ஒன்பதாவது பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோருடன் செலவிடும் சில நிமிடங்கள், அவர்களை மனிதர்களாகக் கருதி, அவர்களுக்கு தரும் புன்னகை ஆகியவை, அவர்களுக்கு நம்பிக்கையைக் கொணரும் என்று கூறியுள்ளார்.

செல்வமற்ற, சக்தியற்ற நிலையே நமக்கு மீட்பளிக்கும் என்று கூறுவதை, இவ்வுலகம் மடமை என்று கருதுகிறது என்பதை தெளிவுபடுத்திய திருத்தந்தை, இதற்கு மாறாக, "உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்" என்று (காண்க. 1 கொரி. 1:26-29) புனித பவுல் கூறியுள்ள சொற்களை நினைவுபடுத்தியுள்ளார்.

தன்னைத் தேடி வருவோரையும், தன்னைக் கூவி அழைப்போரையும் இறைவன் கைவிடுவதில்லை என்பதை, வறியோர் உலக நாள் செய்தியின் இறுதிப் பகுதியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறுமையில் துன்புறுவோர், இறைவனின் பார்வையில், ஒருபோதும் தங்கள் அடிப்படை மாண்பை இழப்பதில்லை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

வறியோர் உலக நாளில் பங்கேற்போர்

வறியோர் உலக நாள் நிகழ்வுகளில் பங்கேற்போர் அனைவரும், மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்கள் ஒரே குடும்பம் என்ற உணர்வை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட கிறிஸ்தவ குழுமங்கள் அனைத்தையும் தான் கேட்டுக்கொள்வதாக, இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ள திருத்தந்தை, இறைவாக்கினர் மலாக்கியின் சொற்களுடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்: "என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்" (மலாக்கி 4:2)

2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய வறியோர் உலக நாள், இவ்வாண்டு, நவம்பர் 17, பொதுக்காலத்தின் 33வது ஞாயிறன்று, மூன்றாவது முறையாக சிறப்பிக்கப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2019, 15:15