தொழிலாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தொழிலாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

உலகத் தொழில் நிறுவனத்திற்கு திருத்தந்தையின் செய்தி

வேலையில்லாத் திண்டாட்டம், பணியிடங்களில் நிகழும் அநீதிகள், வேலைக்கேற்ற ஊதியம் இல்லாமை, மற்றும் கொத்தடிமைத்தனம் ஆகிய பிரச்சனைகளை நாம் தொடர்ந்து சந்திக்கிறோம் – திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில், அமைதியையும், நீதியையும் நிறுவ, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், வேலையில்லாத் திண்டாட்டம், பணியிடங்களில் நிகழும் அநீதிகள், வேலைக்கேற்ற ஊதியம் இல்லாமை, மற்றும் கொத்தடிமைத்தனம் ஆகிய பிரச்சனைகளை, நாம் தொடர்ந்து சந்திக்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் உலக நிறுவனத்தின் கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

ILO நிறுவனத்தை பார்வையிட ஆவல்

ILO என்றழைக்கப்படும் உலகத் தொழில் நிறுவனம், ஜெனீவா நகரில் அண்மையில் நடத்திய 108வது ஆண்டுக் கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தியில், தனக்கு இந்த வாய்ப்பளித்த இந்நிறுவனத்தின் தலைவர் Guy Ryder அவர்களுக்கு நன்றி கூறிய வேளையில், ILO நிறுவனத்தை பார்வையிட தனக்கு வந்திருக்கும் அழைப்பை விரைவில் ஏற்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

தொழிலும், தனிப்பட்ட மற்றும் சமுதாய-சுற்றுச்சூழல் நிறைவும், இன்றைய உலகில் வேலைகளை உருவாக்குவதும், அவற்றை நிர்ணயிப்பதும், என்ற தலைப்புக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

மனித இயல்பை நிறைவு செய்வது, தொழில்

மனிதர்கள் தங்கள் முழு இயல்பை நிறைவு செய்வதற்கு, தொழில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இவ்வுலகைப் படைத்து, காத்துவரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களும், படைப்பைக் காப்பதற்கு தொழில் புரியவேண்டும் என்று கூறியுள்ளார்.

மனித இயல்புக்கு நிறைவளிக்கும் தொழிலை, வர்த்தகப் பொருளாக மாற்றியுள்ளதால், மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும், பணத்தின் அடிப்படையில் அளக்கப் படுவது இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சனை என்று திருத்தந்தை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலமின்றி, கூரையின்றி, தொழிலின்றி...

மனிதர்கள் செய்யும் வேலைகள், நிலம், கூரை, தொழில் என்ற மூன்று தேவைகளை உறுதி செய்யவேண்டும் என்பதை தன் செய்தியில் எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழலில், நிலமற்றவர்களாக, கூரையற்றவர்களாக, வேலையற்றவர்களாக வாழ்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருவதைக் குறித்து கவலையை வெளியிட்டுள்ளார்.

ILO போன்ற உலக நிறுவனங்கள், திருஅவையோடு இணைந்து, தொழிலாளர்களின் பாதுகாப்பையும், அவர்கள் செய்யும் தொழிலுக்கு தகுந்த மதிப்பையும் வழங்குவது அவசியம் என்று திருத்தந்தை தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை வழங்கிய இச்செய்தியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஜெனீவாவில் இடம்பெற்ற 108வது ஆண்டுக்கூட்டத்தில் வாசித்தளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2019, 15:24