தேடுதல்

Vatican News
Sumuleu-Ciuc மரியா திருத்தலத்தில் மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் Sumuleu-Ciuc மரியா திருத்தலத்தில் மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் 

Sumuleu-Ciuc மரியா திருத்தலத்தில் திருத்தந்தையின் மறையுரை

கடந்த கால கசப்பான எண்ணங்கள் ஒரு நாளும், சகோதரர்களாக ஒன்றிணைந்து வாழும் நம் விருப்பத்திற்கு தடைக்கற்களாக நிற்கக்கூடாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறப்புக்கள் என்பதை ஏற்கும்வண்ணம், குழந்தைகளாக, அன்னை மரியாவை நாடி வந்துள்ளோம். போர்க்கள மருத்துவமனையாக உள்ள திருஅவையின் அருளடையாளங்களாக திருத்தலங்கள் விளங்குகின்றன. இங்குதான் நாம், நம் நம்பிக்கைகளைப் புதுப்பிக்கும் வாழ்வுதரும் தண்ணீரின் ஊற்றைத் தேடி வருகிறோம். திருத்தலங்கள் என்பவை, கொண்டாட்டங்களின் இடமாகவும், கண்ணீர், மற்றும், விண்ணப்பங்களின் இடமாகவும் உள்ளன. அன்னமரியா நம்மீது தன் பார்வையைத் திருப்பி, வாழ்வும் வழியும் உண்மையுமான இயேசுவிடம் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னைமரியாவின் பாதங்களுக்கு நாம் வருகிறோம்.

நாம் அனைவரும் திருப்பயணிகள் என்பதே நம் வருகையின் காரணம். மரத்தால் அமைந்த அன்னைமரியாவின் திருவுருவத்தின் முன்னர், ஒவ்வோர் ஆண்டும் பெந்தக்கோஸ்து விழாவுக்கு முந்தைய சனிக்கிழமையன்று கூடுவதை நீங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மத பாரம்பரியத்தின் ஒரு பகுதியான இந்நிகழ்வில், பிற கிறிஸ்தவ சபைகளும் பங்கேற்பதன் வழியாக, இது, கலந்துரையாடல், ஒன்றிப்பு, மற்றும், உடன்பிறந்த உணர்வின் அடையாளமாக உள்ளது. திருப்பயணிகளாக நாம், இறைவனின் கருணையைப் பாடிக்கொண்டே நம் பயணத்தைத் தொடர்கிறோம்.

கானா திருமணத்தில் முதல் புதுமை இடம்பெற பரிந்துரைத்த அன்னை மரியா, இன்றும் நமக்காக இயேசுவிடம் பரிந்துரைத்துக் கொண்டேயிருக்கிறார். அதுமட்டுமல்ல, நாம் இவ்வுலக சிரமங்களுக்கு மத்தியில் நம் உடன்பிறந்த அன்பை இழந்துவிடக்கூடாது என நம்மிடமும் விண்ணப்பிக்கிறார். கடந்தகால கசப்பான எண்ணங்களை நாம் மறக்க முடியாமல் இருக்கலாம், ஆனால், அவை ஒரு நாளும், உடன்பிறந்தோராய் ஒன்றிணைந்து வாழும் நம் விருப்பத்திற்கு தடையாக இருக்கக்கூடாது.

திருப்பயணம் மேற்கொள்வது என்பது, கடந்த கால துன்பங்களை மாற்றியமைத்து, ஒன்றிப்பில், புதிய வாழ்வை துவக்குவதற்குத் தேவையான அருளை இறைவனிடம் வேண்டுவதற்காகும். மேலும், நமக்கு இறைவன் வழங்கவிருக்கும் புதிய பூமியை, புதிய வாழ்வை நோக்கி நடப்பதாகும். மற்றவர்களுடன் ஒன்றிப்பில் வாழ்வதில் நாம் உணரும் தேவையற்ற அச்சங்களை அகற்றவும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் உதவுகிறது நம் திருப்பயணம்.

கடந்தவற்றை மறந்து, புதிய ஒன்றிப்பின் வாழ்வில் நாம் ஈடுபட, ஒருமைப்பாட்டையும், உடன்பிறந்த உணர்வையும், நன்மைசெய்யும் ஆர்வத்தையும், உண்மையையும், நீதியையும் நம்மில் தூண்டும் இயேசுவை அறிந்துகொள்ள திருப்பயணங்கள் உதவுகின்றன. நல்லதொரு வருங்காலத்தை எவ்விதம் நெய்வது என்பதை அன்னைமரியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள, திருப்பயணிகளாக நாம் இங்கு வந்துள்ளோம்.

இறைவனின் தூதருக்கு ஆம் என்ற பதில்மொழியை வழங்கியதன் வழியாக, ஒரு பெரும் மாற்றத்திற்கு, புரட்சிக்கு வித்திட்டார் அன்னை மரியா. இதுவே இறைவன் தெரிவுசெய்வதில் அடங்கியுள்ள மறையுண்மை. இறைவன் நம்மையும், அன்னைமரியாவைப்போல் ‘ஆம்’ என உரைத்து, ஒப்புரவின் பாதையில் நடைபோட அழைக்கிறார். நாமும், புளிக்காரமாக விளங்கும் நற்செய்தியால் நிரப்பப்பட்டவர்களாக, மீட்பின் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்து நடைபோடுவோம்.

01 June 2019, 11:41