தேடுதல்

பானமா திருப்பயணிகள் பானமா திருப்பயணிகள் 

பானமா திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை

நம் குடும்பங்களில் பயன்படுத்தப்படவேண்டிய மூன்று முக்கியமான பண்புகள், அனுமதி கேட்பது, மன்னிப்புக் கோருவது, நன்றி கூறுவது. இவற்றில் ஒன்று குறைந்தாலும், பிரச்சனைகள் உருவாகும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பானமா நாட்டிலிருந்து, வத்திக்கானுக்கு வருகை தந்த திருப்பயணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 13, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்திய வேளையில், அவர்கள் பல்வேறு வழிகளில் தனக்கு நன்றி கூறியதைக் குறிப்பிட்டு, தானும் அவர்களுக்கு நன்றியறிந்திருப்பதாக கூறினார்.

நன்றியைப்பற்றி பேசும் அதே நேரத்தில், நன்றி என்ற சொல்லும், உணர்வும் நம்மிடையே அடிக்கடி மறக்கப்படும் ஒரு விடயமாக மாறி வருகிறது என்பதையும், நன்றி என்ற உணர்வே நம்மை மனிதர்கள் என்ற முறையில் மேன்மைப்படுத்துகிறது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நம் குடும்பங்களில் பயன்படுத்தப்படவேண்டிய மூன்று முக்கியமான பண்புகள், அனுமதி கேட்பது, மன்னிப்புக் கோருவது, நன்றி கூறுவது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவற்றில் ஒன்று குறைந்தாலும், அந்தக் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும் என்று கூறினார்.

இவ்வாண்டின் துவக்கத்தில் தான் பானமா நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்தும், அங்கு தான் சந்தித்த உலக இளையோர் குறித்தும் தன் மகிழ்வை வெளிப்படுத்திய திருத்தந்தை, அந்தப் பயணத்திற்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும்  தன் நன்றியை தெரிவித்தார்.

பானமா நாட்டில் வாழும் பழங்குடியினர், மற்றும் கறுப்பின மக்கள் அனைவரோடும் அந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வாழ்வது தனக்கு மன நிறைவை அளித்தது என்பதை, திருப்பயணிகளிடம் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களை அன்னை மரியா பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2019, 15:42