தேடுதல்

Vatican News
கர்தினால் Elio Sgreccia கர்தினால் Elio Sgreccia 

கர்தினால் Sgreccia மறைவுக்கு, திருத்தந்தையின் இரங்கல்

வாழ்வின் பாப்பிறைக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Elio Sgreccia அவர்கள், மனித வாழ்வை மதிப்பதிலும், வாழ்வின் மாண்பைக் காப்பதிலும் அயராது உழைத்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 5, இப்புதனன்று இறையடி சேர்ந்த கர்தினால் Elio Sgreccia அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், செபங்களையும் ஒரு தந்தியின் வழியே பதிவு செய்திருந்தார்.

வாழ்வின் பாப்பிறைக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Sgreccia அவர்கள் மனித வாழ்வை மதிப்பதிலும், மனித வாழ்வின் மாண்பைக் குறித்து, அனைத்து உலக அவைகளிலும் அயராது வலியுறுத்தியதையும் திருத்தந்தை தன் தந்திச் செய்தியில் சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளார்.

நற்செய்தியின் அயராத பணியாளராக வாழ்ந்த கர்தினால் Sgreccia அவர்களுக்கு இறைவன் நிறைவாழ்வை வழங்கவும், அவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் அளிக்கவும் தான் செபிப்பதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

1928ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இத்தாலியின் அன்கோனா பகுதியில் பிறந்த கர்தினால் Sgreccia அவர்கள், 1952ம் ஆண்டு, ஜூன் 29ம் தேதி அருள்பணியாளராகவும், 1993ம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1994ம் ஆண்டு, வாழ்வின் பாப்பிறைக் கழகத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கர்தினால் Sgreccia அவர்கள், அதே கழகத்தின் தலைவராக, 2005ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு முடிய பணியாற்றினார்.

"வாழ்வின் நன்னெறி கையேடு" என்ற நூலையும், வேறு பல கட்டுரைகளையும் எழுதியுள்ள கர்தினால் Sgreccia அவர்களை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கர்தினாலாக உயர்த்தினார்.

ஜூன் 6, இவ்வியாழனன்று, தன் 91வது வயதை நிறைவு செய்வதற்கு ஒருநாள் முன்னதாக ஜூன் 5, இப்புதனன்று இறையடி சேர்ந்த கர்தினால் Sgreccia அவர்களின் மறைவையடுத்து, கத்தோலிக்க திருஅவையில் 220 கர்தினால்கள் உள்ளனர் என்பதும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 120 என்பதும் குறிப்பிடத்தக்கன.

கர்தினால் Elio Sgreccia அவர்களின் அடக்கத் திருப்பலி, ஜூன் 7, இவ்வெள்ளியன்று, பிற்பகல் 2.15 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

06 June 2019, 14:36