தேடுதல்

Vatican News
புக்காரெஸ்ட் புனித யோசேப் கத்தோலிக்க பேராலயம் புக்காரெஸ்ட் புனித யோசேப் கத்தோலிக்க பேராலயம்  (ANSA)

புக்காரெஸ்ட் புனித யோசேப் கத்தோலிக்க பேராலயத்தில் திருப்பலி

புக்காரெஸ்ட் திருப்பீட தூதரகத்தில், ருமேனியாவில் பணியாற்றும், 22 இயேசு சபையினரை, ஏறத்தாழ ஒரு மணிநேரம் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

மே 31, இவ்வெள்ளி மாலையில், புக்காரெஸ்ட் ஆர்த்தடாக்ஸ் சபை பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின்னர், அங்கிருந்து 3.1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, புக்காரெஸ்ட் புனித யோசேப் கத்தோலிக்க பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். 1875க்கும், 1883ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்ட இந்தப் பேராலயத்தில், ஒவ்வோர் ஆண்டும், ஆர்கன் பன்னாட்டு இசை விழா நடைபெறுகின்றது. இங்கு, மறைசாட்சியான அருளாளர் Vladimir Ghika மற்றும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை, இப்பேராலயத்திற்குச் சென்றவேளை, அது விசுவாசிகளால் நிறைந்திருந்தது. அன்னை மரியா எலிசபெத்தம்மாளைச் சந்தித்த விழாவான மே 31, இவ்வெள்ளியன்று, திருத்தந்தையும், இப்பேராலயத்தில், இவ்விழா திருப்பலியை நிறைவேற்றினார். ருமேனியாவில், கத்தோலிக்கர் 7.3 விழுக்காடுதான். இவர்கள், டிரான்சில்வேனியா மற்றும் மோல்டோவியா மாநிலங்களில் பெருமளவாக வாழ்கின்றனர். ஆயினும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புக்காரெஸ்ட் நகரில் நிறைவேற்றிய இந்த முதல் திருப்பலியில், பேராலயத்திற்கு வெளியே அமர்ந்தும், பெருமளவில் கத்தோலிக்கர் கலந்துகொண்டனர். திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், விசுவசிப்பவரும், சந்திப்பையும், ஒன்றிணைந்து நடைபயில்வதையும் ஊக்குவிப்பவரும் பேறுபெற்றோர். அன்னை மரியா, சந்திப்பு மற்றும் மகிழ்ச்சியின் எடுத்துக்காட்டு. சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவியுங்கள் என, அழைப்பு விடுத்தார். இத்திருப்பலியில் கடைசி ஆசீருக்கு முன்னர், புக்காரெஸ்ட் பேராயர்  Ioan Robu அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். இதே புனித யோசேப் பேராலயத்தில்தான், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1999ம் ஆண்டு, மே 8ம் தேதி திருப்பலி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருப்பலியை நிறைவுசெய்து, புக்காரெஸ்ட் திருப்பீட தூதரகத்திற்குத் திருத்தந்தை சென்றபோது, மே 31, இவ்வெள்ளி, உள்ளூர் நேரம் இரவு ஏறத்தாழ 8 மணியாக இருந்தது.

ருமேனிய இயேசு சபையினர் சந்திப்பு

புக்காரெஸ்ட் திருப்பீட தூதரகத்தில், ருமேனியாவில் பணியாற்றும், 22 இயேசு சபையினரை, ஏறத்தாழ ஒரு மணிநேரம் சந்தித்து கலந்துரையாடினார், இயேசு சபையினராகிய, திருத்தந்தை பிரான்சிஸ். இவர்களில் 14 பேர் ருமேனிய நாட்டவர். இச்சந்திப்புக்குப் பின்னர், இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

“மிக அழகான மற்றும் நல்லணக்க பன்மைத்தன்மையிலிருந்து ஒன்றிப்பை வடிவமைப்பதற்கு, தூய ஆவியார் விரும்புகிறார்” என்ற சொற்களும், “மரியா பற்றி நாம் தியானிக்கையில், தங்களின் ஆரவாரமற்ற தியாகங்கள், பக்தி, தன்னலமறுப்பு ஆகியவற்றால், நிகழ்காலத்தை வடிவமைத்துக்கொண்டு, நாளையக் கனவுகளுக்குப் பாதையைத் தயாரிக்கும், பல பெண்கள், அன்னையர் மற்றும் பாட்டிகள் பக்கம் நம் கண்களைத் திரும்பச் செய்கின்றன” என்ற சொற்களும், இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் டுவிட்டரில் பதிவாகியிருந்தன.

01 June 2019, 14:14