Centesimus Annus Pro Pontefice அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் பங்குகொண்டவர்கள் சந்திப்பு Centesimus Annus Pro Pontefice அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் பங்குகொண்டவர்கள் சந்திப்பு 

நம் பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதற்கு மனமாற்றம் தேவை

1991ம் ஆண்டு மே 1ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட, "நூறாவது ஆண்டு (Centesimus Annus)" என்ற திருமடலில் தூண்டுதல் பெற்று, Centesimus Annus - Pro Pontifice அமைப்பு உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு, இதயங்களிலும் மனங்களிலும் ஏற்படுகின்ற உண்மையான மனமாற்றம் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன்னை சந்திக்க வந்திருந்த ஒரு குழுவினரிடம் கூறினார்.

Centesimus Annus - Pro Pontifice எனப்படும் திருத்தந்தைக்கு ஆதரவான அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் திருத்தந்தையின் Laudato si’ (மே,24,2015) திருமடல் பற்றி, வத்திக்கானில் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 500 பிரதிநிதிகளை, ஜூன் 08, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

‘இறைவா உமக்கே புகழ்’ என்ற இந்த திருமடல் வெளியிடப்பட்ட, கடந்த நான்கு ஆண்டுகளில், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, ஐ.நா. வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளை, பல நாடுகள் நடைமுறைப்படுத்தி வருவது பற்றி பாராட்டினார்.

புதுப்பிக்கதக்க மற்றும் நீடித்த நிலையான சக்தியில் முதலீடு செய்வது, புதிய முறைகளில் எரிசக்தி கையாளப்படுவது, உலகளவில், குறிப்பாக இளையோர் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்துள்ளது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் எண்ணற்ற சவால்கள் உள்ளன, எனினும், நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சிகளை எடுக்குமாறும், இதற்கு, மக்களில் மனமாற்றம் அவசியம் என்றும், திருத்தந்தை கூறினார்.

பசி, உணவு பாதுகாப்பின்மை, வீணாக்கும் கலாச்சாரம் உட்பட, உலகில் நிலவும் தற்போதைய பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் தீர்வுகள், மேலெழுந்தவாரியாக இருத்தலாகாது எனவும், இதற்கு, மக்களை மையப்படுத்தும், அறநெறிசார்ந்த புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டம் அவசியம் எனவும் திருத்தந்தை கூறினார்.

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இதற்கு, உலகளாவிய வளர்ச்சித்திட்ட அமைப்புகளில் மாற்றம் தேவை என்றும் உரைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முயற்சியில் நம் வானகத்தந்தையின் இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, முன்னோக்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2019, 14:56