7 மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாக அறிவித்த திருப்பலி 7 மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாக அறிவித்த திருப்பலி 

7 மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாக அறிவித்த இறைவழிபாடு

1948ம் ஆண்டில், கிரேக்க-கத்தோலிக்க ஆயர்கள் அனைவரும், கைது செய்யப்பட்ட பின்னர், ருமேனியாவில், 1989ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கம்யூனி ஆட்சி முடியும்வரை, இக்கத்தோலிக்கருக்கென வத்திக்கான் வானொலி, திருவழிபாட்டை ஒலிபரப்பியது

மேரி தெரேசா - வத்திக்கான்

ஜூன் 2, இஞ்ஞாயிறு, ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழா. இப்பெருவிழாவையொட்டி இஞ்ஞாயிறன்று டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இயேசுவின் விண்ணேற்றம், நம் கண்களை விண்ணகம் நோக்கி உயர்த்தவும், அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்குமாறு, அவர் நம்மிடம் ஒப்படைத்த மறைப்பணியை, உயிர்த்த நம் ஆண்டவரின் அருளுடன் நிறைவேற்றவும் நம்மை வலியுறுத்துகிறது” என எழுதியுள்ளார். மேலும், இஞ்ஞாயிறு, உலக சமூகத் தொடர்பு நாள். இந்நாளையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்தவர்கள் என்ற முறையில், உரையாடல், சந்திப்பு, புன்னகைகள் ஆகியவற்றுக்கு வழிகளைத் திறந்து, விசுவாசிகள் என்ற நம் தனித்துவத்தை இணையதளம் வழியாகவும் வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்” என்று வார்த்தைகளைப் பதிவுசெய்துள்ளார்.

அருளாளர்களாக அறிவித்த திருப்பலி

ஜூன் 02, இஞ்ஞாயிறு திருத்தந்தையின் ருமேனியத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இன்று காலையில், புக்காரெஸ்ட் திருப்பீடத் தூதரகத்தில் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லி, தனது இலச்சினை அமைக்கப்பட்ட அழகான கலைப்பொருள் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு, அங்கிருந்து விமான நிலையம் சென்று, Sibiu நகர் சென்று, அங்கிருந்து பிளாஜ் (Blaj) நகருக்கு காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். சின்ன உரோம் என அழைக்கப்படும் பிளாஜ் நகரம், டிரான்சில்வேனியவில், ருமேனிய கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் சமய மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய மையமாகும். துருக்கிப் பேரரசின் பாதுகாப்பைப் புறக்கணித்து, ஆஸ்ட்ரியப் பேரரசின் பாதுகாப்பில் இணைந்த ஒப்பந்தம் வழியாக, 1687ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி, இத்திருஅவை, உரோம் திருஅவையோடு இணைந்தது. இந்நகரில்தான், சிரியாக் எழுத்துக்களிலிருந்து, இலத்தீன் எழுத்துக்களில் முதன்முதலாக ருமேனிய எழுத்துக்கள் எழுதப்பட்டன. மேலும், டிரான்சில்வேனியா ஹங்கேரி நாட்டுடன் இணைக்கப்படும் என அஞ்சி, 1848ம் ஆண்டில், பிளாஜ் நகரின் சுதந்திர வளாகத்தில், நாற்பதாயிரத்திற்கு அதிகமான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நகரின் சுதந்திர வளாகத்தில், இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கிய கிரேக்க வழிபாட்டுமுறை இறைவழிபாட்டில், கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின், Valeriu Traian Frenţiu, Vasile Aftenie, Ioan Suciu, Tit Liviu Chinezu, Ioan Bălan, Alexandru Rusu, Iuliu Hossu ஆகிய ஏழு மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இவர்களில், Frenţiu, Aftenie, Suciu, Chinezu ஆகிய நான்கு அருளாளர்களும், கம்யூனிச ஆட்சியில், சிறையிலேயே இறந்தனர். Bălan, Rusu, Hossu ஆகிய மூவரும், சிறையில் அனுபவித்த கடும் சித்ரவதைகளால் பின்னர் இறந்தனர். 1948ம் ஆண்டு நவம்பர் 28 மற்றும் 29ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், கிரேக்க-கத்தோலிக்க ஆயர்கள் அனைவரும், கம்யூனிச அரசால் கைது செய்யப்பட்டனர். அதிலிருந்து, 1989ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கம்யூனி ஆட்சி முடியும்வரை, வத்திக்கான் வானொலி, ருமேனியக் கத்தோலிக்கருக்கென திருவழிபாட்டை ஒலிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

இவ்வழிபாட்டில், ருமேனிய அரசுத்தலைவர் Klaus Iohannis, பிரதமர் Vasilica Viorica Dancila, Blaj நகர் மேயர் இளவரசி Gheorghe Valentin Rotar உட்பட, ருமேனிய அரசின் முக்கிய அதிகாரிகள் உட்பட, ஏறத்தாழ அறுபதாயிரம் விசுவாசிகள் கலந்துகொண்டனர். மேலும் இருபதாயிரம் பேர், பெரிய திரைகள் வழியாக, இதில் கலந்துகொண்டனர். இவ்வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட திருப்பலி பாத்திரமும், நற்செய்தியும், இந்த ஏழு மறைசாட்சிகளில் ஒருவரான வயதான ஆயர் Traian Frentiu அவர்களால் பயன்படுத்தப்பட்டவை. மேலும், இதில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி, இந்த அருளாளர்கள், சிறையில் படுத்த மரக்கட்டில்கள் மற்றும் சிறையின் இரும்பு சன்னல் கம்பிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. இந்த இறைவழிபாட்டின் இறுதியில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த இறைவழிபாட்டை நிறைவுசெய்து, பிளாஜ் நகர் பேராயர் இல்லம் சென்று மதிய உணவருந்தி, சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2019, 14:54