Lednica பகுதியில் இளையோர் கூட்டம் Lednica பகுதியில் இளையோர் கூட்டம் 

போலந்து கிறிஸ்தவத்தை தழுவிய இடத்தில் இளையோர் கூட்டம்

செபம், மற்றும், ஆடல் பாடலுடன் நடத்தப்பட்ட இளையோர் கூட்டத்திற்கு, “எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என, உமக்குத் தெரியுமே!” என்பது தலைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

போலந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளையோரும், சில ஐரோப்பிய நாடுகள், மற்றும், பானமாவைச் சேர்ந்த இளையோரும் நடத்திய கூட்டம் ஒன்றிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், இயேசுவின் குரலுக்கு கவனமுடன் செவிமடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.  

போலந்தின் Lednica  திறந்த வெளியில், ஜூன் 01, கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், செபம், மற்றும், ஆடல் பாடலுடன் ஏறத்தாழ அறுபதாயிரம் இளையோர் கலந்துகொண்டனர். “எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என இயேசுவிடம், புனித பேதுரு கூறிய பதில், இந்த இளையோர் கூட்டத்திற்குத் தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் உரை வழங்கிய போலந்து ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanislaw Gadecki அவர்கள், அனைத்து விதமான அன்புக்கு ஆதாரமாகவும், உரமூட்டுவதாகவும்  கிறிஸ்துவின் அன்பு உள்ளது என்றார்.

ஒப்புரவு அருள்சாதனத்தை மையப்பொருளாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், நள்ளிரவிலும், ஆடல், பாடல் மற்றும் செபத்துடன் செலவிட்டனர், இளையோர். இக்கூட்டத்தில், திருநற்கருணைமுன் மௌனமாகச் செபித்தல், திருப்பலி போன்றவைகளும் இடம்பெற்றன.

போலந்து நாட்டில், முதன்முதலில் திருமுழுக்கு இடம்பெற்ற Lednica பகுதியில், கடந்த 23 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் இந்த இளையோர் கூட்டம், அடுத்த ஆண்டில், ஜூன் மாதம் 6ம் தேதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2019, 14:48