ருமேனியா நாட்டிற்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி ருமேனியா நாட்டிற்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி 

ருமேனியா நாட்டிற்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

நம்மைப் பிரித்துவைக்கும் வேலிகளை அகற்றி, நம் கிறிஸ்தவ குடும்பத்தின் பாரம்பரியத்தை வளர்ப்பதற்கு, ருமேனியா பயணம் துணைபுரியும் – திருத்தந்தையின் காணொளிச் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 31, இவ்வெள்ளி முதல், ஜூன் 2, வருகிற ஞாயிறு முடிய ருமேனியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு, இச்செவ்வாய் மாலையில் காணொளிச் செய்தியொன்றை அனுப்பி வைத்தார்.

அழகும், வரவேற்கும் பண்பும் மிகுந்த ருமேனியா நாட்டிற்கு, உடன்பிறந்தோனாகவும், திருப்பயணியாகவும் வரும் நான், ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தையையும், அச்சபையின் தலைவர்களையும், கத்தோலிக்க மக்களையும் சந்திக்கப்போவதை எண்ணி மகிழ்கிறேன் என்று, திருத்தந்தை தன் செய்தியை ஆரம்பித்துள்ளார்.

திருத்தூதர்களான பேதுரு, மற்றும் அந்திரேயா காலத்திலிருந்து, நமது உறவுகள் தொடர்ந்து வருகின்றன என்று தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித அந்திரேயா, ருமேனியா நாட்டிற்கு கிறிஸ்துவ மறையைக் கொணர்ந்தார் என்பதையும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ மறையின் துவக்கத்திலிருந்து மறைசாட்சிகள் பகர்ந்துவந்த சாட்சியம் நம் காலத்திலும் தொடர்கிறது என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை, நம் காலத்திய மறைசாட்சிகளில் ஏழு கிரேக்க கத்தோலிக்க ஆயர்களை, தன் ருமேனியப் பயணத்தில் அருளாளராக அறிவிக்கவிருப்பதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

நம்மைப் பிரித்துவைக்கும் வேலிகளை அகற்றி, இணைந்து நடைபயின்று, நம் கிறிஸ்தவ குடும்பத்தின் பாரம்பரியத்தை வளர்ப்பதற்கு, இப்பயணம் துணைபுரியும் என்று தான் நம்புவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காணொளிச் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

தன் பயணத்திற்காக ஏற்பாடு செய்துவரும் அனைவருக்கும் தன் மனமார்ந்த நன்றியைக் கூறி, நாம் விரைவில் சிந்திப்போம் என்ற சொற்களுடன், திருத்தந்தை, தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

மேலும், "ஆண்டவரின் நன்மைத்தனத்தில் நம்பிக்கை கொண்டால், உங்கள் வாழ்வின் நிகழ்வுகள், நோக்கம் ஆகியவற்றின் பொருளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2019, 15:33