தேடுதல்

புனித ஜான் பாப்டிஸ்ட் தெ ல சால் கிறிஸ்தவப் பள்ளிகளின் மாணவர்களுடன் திருத்தந்தை புனித ஜான் பாப்டிஸ்ட் தெ ல சால் கிறிஸ்தவப் பள்ளிகளின் மாணவர்களுடன் திருத்தந்தை 

கிறிஸ்தவ பள்ளிகளின் அருள் சகோதரர்களைச் சந்தித்த திருத்தந்தை

கல்வி என்பது, ஒருவர் செய்யும் வேலை அல்ல, மாறாக, அதுவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்பதை உணர்ந்த புனித தெ ல சால்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கல்வி என்பது, வறியோர் உட்பட, ஒவ்வொருவரும் பெற்றுள்ள உரிமை என்பதை உணர்ந்த புனித ஜான் பாப்டிஸ்ட் தெ ல சால், வறியோருக்கு கல்வி வழங்குவதற்காக, தன் செல்வமிக்க குடும்பத்தையும் துறந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த கிறிஸ்தவப் பள்ளிகளின் அருள் சகோதரர்களிடம் கூறினார்.

புனித ஜான் பாப்டிஸ்ட் தெ ல சால் அவர்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவப் பள்ளிகளின் அருள் சகோதரர்கள் துறவு சபையைச் சார்ந்த உலகப் பிரதிநிதிகள் 300க்கும் அதிகமானோரை, மே 16, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இத்துறவு சபையினர் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

புனித தெ ல சால் இறையடி சேர்ந்ததன் 300வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் இச்சபையைச் சார்ந்த துறவியர், கல்வித்துறையில் ஒரு புரட்சியை உருவாக்கிய தங்கள் சபையின் நிறுவனரைத் தொடர்ந்து, கல்விப் பணியில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

கல்வி என்பது, ஒருவர் செய்யும் வேலை அல்ல, மாறாக, அதுவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்பதை உணர்ந்த புனித தெ ல சால் அவர்கள், தலைசிறந்த ஆசிரியரான கிறிஸ்துவை தன் எடுத்துக்காட்டாக கொண்டு தன் வாழ்வை மாற்றிக்கொண்டார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

வறிய இளையோருக்கு பள்ளிகள் அமைத்ததோடு, வயதில் முதிர்ந்தோருக்கும், பணி ஒய்வு பெற்றோருக்கும் கல்வி புகட்ட, ஞாயிறு பள்ளிகளையும், சிறையில் இருந்தோருக்கு தனிப்பட்ட பள்ளிகளையும் உருவாக்கியவர், புனித தெ ல சால் என்பதை, திருத்தந்தை, பெருமையுடன் குறிப்பிட்டார்.

சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோருக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த இப்புனிதரின் ஆர்வத்தையும், அயராத உழைப்பையும், கிறிஸ்தவப் பள்ளிகளின் அருள் சகோதரர்கள் இன்றைய உலகில் பின்பற்றவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

வாழ்வில் பற்றையும், நம்பிக்கையையும் இழந்து, நவீன 'கல்லறைகளில்' தங்களையே புதைத்துக் கொண்டவர்களைத் தேடிச்சென்று உதவ, கிறிஸ்தவப் பள்ளிகளின் அருள் சகோதரர்கள் முன்வரவேண்டும் என்று, திருத்தந்தை தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2019, 14:48