சோஃபியாவில் பல்சமய அமைதி வழிபாடு சோஃபியாவில் பல்சமய அமைதி வழிபாடு 

சோஃபியாவில் திருத்தந்தை, பல்சமயத்தவர் அமைதிக்காக செபம்

சோஃபியாவில் இறைவேண்டல் நிகழ்வில் முதலில், புனித பிரான்சிஸ் அசிசியாரின், படைப்பின் புகழ் பாடலை, இருவர் வாசித்தனர். அந்நேரத்தில், பல்கேரியாவின் இயற்கை வளங்கள் மற்றும், விலங்குகளின் உருவங்கள் ஒளித் திரையில் காட்டப்பட்டன.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இந்த உலகம் எங்கும் அமைதி பரவியிருப்பதற்கு, நாம் ஒவ்வொருவரும் நம் ஒத்துழைப்பை நல்குவோம் என்று, பல்கேரியாவில், மே 06, இத்திங்கள் மாலையில் அழைப்பு விடுத்து, அந்நாட்டில், தனது இரண்டு நாள்கள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். மே 05, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர், பிரதமர், அரசு மற்றும், தூதரக அதிகாரிகள், பொது மக்கள் பிரதிநிதிகள், ஆர்த்தடாக்ஸ் சபையினர், கத்தோலிக்கர் என, எல்லாத் தரப்பினரையும் சந்தித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக, இத்திங்கள் உள்ளூர் நேரம் மாலை, 6.15 மணியளவில், சோஃபியா நகரின் திறந்தவெளி சுதந்திர வளாகத்தில், பல்கேரிய பல்சமயப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, இக்கால உலகிற்கு அதிகம் தேவைப்படும் அமைதிக்காக, இறைவனிடம் மன்றாடினார் திருத்தந்தை. பல்கேரியாவில் கம்யூனிசம் ஆட்சியில் இருந்த காலத்தில், லெனின் வளாகம் என அழைக்கப்பட்ட, Nezavisimost வளாகம், அதாவது இந்த சுதந்திர வளாகத்தில் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், மெழுகில், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தின் இலச்சினையுடன், ஒளியேற்றப்பட்ட பெரிய மெழுகுவர்த்தியும், அமைதியின் அடையாளமாக, ஓர் ஒலிவச் செடியும், பல்கேரியாவின் அடையாளமாக, ரோஜா மலர்களும் வைக்கப்பட்டிருந்தன. அமைதியின் நிலமாகிய பல்கேரியாவிலிருந்து, அப்பகுதியிலும், உலகிலும், அமைதியின்  ஒளிக்கற்றைகள் வீசட்டும் என்ற பொருளில், மெழுகுதிரி எரிந்துகொண்டிருந்தது. ஆர்த்தடாக்ஸ் சபை, பிரிந்த கிறிஸ்தவ சபை, அர்மேனிய ஆர்த்தடாக்ஸ் சபை, யூதம், இஸ்லாம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மேடையில்  ஏறியபோது, "We Are the World" என்ற பாடலை, சிறார் குழு ஒன்று, இனிமையாக இசைத்துக்கொண்டிருந்தது. அந்நேரத்தில், இலேசாக மழையும் தூரிக்கொண்டிருந்தது. இறைவேண்டல் வழிபாடு நடைபெற்ற இடத்தில், கி.பி.343-344ம் ஆண்டில், Serdica பொதுச்சங்கம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதிக்காக இறைவேண்டல்

இந்த இறைவேண்டல் நிகழ்வில் முதலில், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின், படைப்பின் புகழ் பாடலை, இருவர், இத்தாலியம் மற்றும் பல்கேரிய மொழிகளில் மாறி மாறி வாசித்தனர். அந்நேரத்தில், பல்கேரியாவின் இயற்கை வளங்கள் மற்றும், விலங்குகளின் உருவங்கள் ஒளித் திரையில் காட்டப்பட்டன. பின்னர், ஓர் இளைஞர், மேடையில் எரிந்துகொண்டிருந்த மெழுகுதிரியிலிருந்து ஒரு விளக்கை ஏற்றினார். அதிலிருந்து ஆறு சிறார், பல்வேறு மதத்தவரைக் குறிக்கும் முறையில், ஆறு விளக்குகளை ஏற்றினர். பின்னர், 122ம் திருப்பாடலை இருவர், இத்தாலியம் மற்றும் பல்கேரிய மொழிகளில் மாறி மாறி வாசித்தனர். அதன்பின்னர், பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபை, பல்கேரிய இவாஞ்சலிக்கல் சபை, அர்மேனிய ஆர்த்தடாக்ஸ் சபை, யூதம், இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களின் பிரதிநிதிகள், தங்கள் மதங்களின் மரபுகளின்படி இறைவேண்டல் செய்தனர். ஒவ்வொருவரும் செபித்த பின்னர், புனித பிரான்சிஸ் அசிசியாரின், “இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும்” என்ற இறைவேண்டல் பாடப்பட்டது. இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவருக்கொருவர் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வோம் என்று பல்கேரிய மொழியில் கேட்டுக்கொண்டவுடன், அனைவரும் சமாதானத்தைப் பகிர்ந்து கொண்டனர். திருத்தந்தையும் சிறிய உரை ஒன்றும் நிகழ்த்தினார். இந்த இறைவேண்டல் நிகழ்வை நிறைவுசெய்து, சோஃபியாவிலுள்ள திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2019, 16:00