தேடுதல்

ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபை மாளிகையில்.......... ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபை மாளிகையில்.......... 

ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபை மாளிகையில் திருத்தந்தை

புக்காரெஸ்ட் புனித யோசேப் கத்தோலிக்க பேராலயம் சென்று திருப்பலி நிறைவேற்றல், ருமேனியாவில் பணியாற்றும் இயேசு சபையினரைச் சந்தித்தல் போன்றவற்றுடன், முதல் நாள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெறும்

மேரி தெரேசா - வத்திக்கான்

மே 31, இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 3.35 மணிக்கு, புக்காரெஸ்ட் நகரிலுள்ள, ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் மாளிகைக்குக் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்சபை, ருமேனியாவில், 1925ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மாளிகை, 1906க்கும், 1908ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. இவ்விடம், கம்யூனிச ஆட்சியில்,1948ம் ஆண்டு முதல், 1989ம் ஆண்டு வரை, தேசிய சனநாயக சோஷலிச அவையாகச் செயல்பட்டது. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, இவ்விடத்தைப் பயன்படுத்த, 1996ம் ஆண்டில் உரிமை பெற்றார். இந்த மாளிகையில் ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை டானியேல் அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த மாளிகையில், ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபையின் மாமன்றத்தினரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் முதுபெரும் தந்தை டானியேல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். இதற்குப் பின்னர், இவ்வெள்ளி மாலை 4.45 மணிக்கு, ஆர்த்தடாக்ஸ் சபையின், மக்களின் மீட்பு தேசியப் பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். முதுபெரும் தந்தை டானியேல் அவர்களுடன் இங்குச் சென்ற திருத்தந்தை, செப வழிபாட்டில் கலந்துகொண்டார். முதுபெரும் தந்தை டானியேல் அவர்களின் திருத்தந்தையை வரவேற்றபின், திருத்தந்தையும், வானகத்திலுள்ள எம் தந்தாய் என்ற செபம் பற்றி உரையாற்றினார். இறுதியில் எல்லாருடனும் சேர்ந்து அச்செபத்தைச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். முதுபெரும் தந்தை டானியேல் அவர்களுக்கு, புனித பவுல் அவர்கள் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டையொட்டிய நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பை நிறைவு செய்து, புக்காரெஸ்ட் புனித யோசேப் கத்தோலிக்க பேராலயம் செல்தல், அங்கு திருப்பலி நிறைவேற்றல், ருமேனியாவில் பணியாற்றும் இயேசு சபையினரைச் சந்தித்தல் போன்றவற்றுடன், ருமேனியாவில் முதல் நாள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெறும். ருமேனியாவில் கத்தோலிக்கர், 7.3 விழுக்காடாக இருந்தபோதிலும், திருத்தந்தை இந்நாளில் சென்ற இடமெல்லாம் மக்கள் பெருமளவில் கூடிநின்று அமோக வரவேற்பளித்தனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஜூன் 1,2 இச்சனி, ஞாயிறு தினங்களில், Bacau, Iaşi, Şumuleu Ciu, நகரங்களில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு பகல் 11 மணிக்கு, Transylvania மாநிலத்தின் Blaj நகரிலுள்ள, விடுதலை முகாமில், ஏழு இறைஊழியர்களை அருளாளர்களாக அறிவிக்கும் திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த இடத்தில்தான் 1848ம் ஆண்டு மே 15ம் நாளன்று, நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட ருமேனியர்கள் கூடி, தங்களை ஒரு நாட்டினராக ஏற்கவேண்டுமெனப் போராடினர். திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் ருமேனிய மக்களில் நல்தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்புவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2019, 16:25