சாந்தா மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் புக்காரஸ்ட் பேராயர் Ioan Robu சாந்தா மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் புக்காரஸ்ட் பேராயர் Ioan Robu  

ருமேனியாவின் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும்

திருத்தந்தையின் ருமேனியா திருத்தூதுப்பயணம், அங்கு வாழும் கத்தோலிக்கர்களுக்கும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே, ஒன்றிப்பை உருவாக்கும் - Bucharest பேராயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வார இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ருமேனியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், அங்கு வாழும் கத்தோலிக்கர்களுக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே ஒன்றிப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு பேராயர் Ioan Robu.

இம்மாதம் 31ம்தேதி, வெள்ளி முதல், ஜூன் 2ம் தேதி, ஞாயிறு முடிய, ருமேனியாவில் இடம்பெறவுள்ள திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், புக்காரஸ்ட் பேராயர் Robu அவர்கள், சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பிளவுபட்டு நிற்கும் ஒரு ருமேனியாவை, திருத்தந்தை காணும் அதேவேளை, தினசரி வாழ்வில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கர்களும், நல்லுறவில் வாழ்வதையும், காண்பார் என்று கூறினார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர், 1999ம் ஆண்டு, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், ருமேனியாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோதும் புக்காரஸ்ட் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பணியாற்றிய Robu அவர்கள், தன் உயர் மறைமாவட்டத்தில், பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள், இரு சபைகளின் அங்கத்தினர்களையும் கொண்டவைகளாக உள்ளன என்றும், ஒருவர், மற்றவரை மதித்து, பிரச்னைகளின்றி அவர்கள் வாழ்வதாகவும் தெரிவித்தார்.

இன்றைய ருமேனியா சந்திக்கும் பெரும்பிரச்னைகளுள் ஒன்று, குடிபெயர்தல் என குறிப்பிட்ட பேராயர் Robu அவர்கள், வளமான வாழ்வைத் தேடி, பெற்றோர் வேறு நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளதால், குழந்தைகள், பெற்றோரின் பராமரிப்பின்றி வாழ்ந்து,  குடும்ப வாழ்வு சிதைந்து வருகின்றது, என்ற கவலையை வெளியிட்டார்.

இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் ருமேனியா நாட்டில் வாழும் 2 கோடி மக்களுள், 7.3 விழுக்காட்டினர் மட்டுமே கத்தோலிக்கர், 86 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2019, 14:38