தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையை காணொளித் திரையில் காணும் விசுவாசிகள் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையை காணொளித் திரையில் காணும் விசுவாசிகள்  (ANSA)

தூய ஆவியார் என்றும் துணை நிற்பார்

உயிரோடு எழுந்த ஆண்டவரை நமக்கு எப்போதும் வழங்கும் தூய ஆவியாரின் பணிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையதாக திருஅவை விளங்குகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரலாற்றின் பாதையில் தூயஆவியார் திருஅவையை வழிநடத்திச் செல்வதால், திருஅவையானது தேங்கிப்போன ஒரு நிலையில் வாழமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோரிடம் கூறினார்.

'என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்', என, இயேசு, தன் சீடர்களிடம் கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து, இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் கொடைகளுக்கு, நம் இதயங்கள் திறக்கப்பட வேண்டும் என, கடவுள் இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்றார்.

உயிரோடு எழுந்த ஆண்டவரை நமக்கு எப்போதும் வழங்கும் தூய ஆவியாரின் பணிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையதாக திருஅவை விளங்குகிறது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் சிலுவையை எதிர்கொண்டு நிற்கும் வேளையில், தன் சீடர்களை நோக்கி, அவர்கள் தனியாக விடப்பட மாட்டார்கள், மாறாக, தூய ஆவியார் அவர்களுக்கு துணை நிற்பார் என்ற உறுதியை வழங்கிய இயேசு, சீடர்கள் நற்செய்தியை எடுத்துச் செல்லும்போது, தூய ஆவியார் எப்போதும் அவர்களுடனிருப்பார் எனவும் எடுத்துரைத்ததை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இயேசு தன் தந்தையிடம் திரும்பிச் சென்றாலும், தூய ஆவியாரின் நடவடிக்கைகள் வழியாக தன் சீடர்களை வழிநடத்தி உற்சாகமூட்டி வருகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை, தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில்.

நம் விசுவாசப் பயணத்தில் சுமைகளாக வரும் இவ்வுலகச் தளைகளிலிருந்து விடுபடுவதற்கு, இறைவார்த்தைகளை தாழ்ச்சியுடன் செவிமடுப்பது அவசியம் என்பதையும், உறுதியுடன் கூடிய விசுவாசத்தையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு எடுத்துக்காட்டாக அன்னை மரியாவையும் முன்வைத்தார்.

26 May 2019, 13:03