பல்கேரியா Nevski பேராலயம் பல்கேரியா Nevski பேராலயம் 

பல்கேரியா, வட மாசிடோனியா திருத்தூதுப் பயணத்திற்காகச் செபியுங்கள்

அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வு கொண்ட திருப்பயணியாக, பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா குடியரசுகளுக்கு, நாளை (மே 5) நான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபியுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா குடியரசுகளுக்கு, மே 5, இஞ்ஞாயிறன்று தனது 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்திற்காகச் செபிக்குமாறு, நம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வு கொண்ட திருப்பயணியாக, பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா குடியரசுகளுக்கு, நாளை நான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தில், செபங்களோடு என்னுடன் பயணம் செய்யுங்கள் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், மே 4, இச்சனிக்கிழமையன்று, பதிவாகியிருந்தன.

மே 5, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை 6.30 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து காரில் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு பல்கேரியத் தலைநகர் சோஃபியாவுக்கு, ஆல் இத்தாலிய A321 விமானத்தில் புறப்படுவார். இரண்டு மணி நேரம் விமானப் பயணம் செய்து, சோஃபியா நகரை அடையும் திருத்தந்தையை, பல்கேரியப் பிரதமர், விமான நிலையத்தில் வரவேற்பார். பின்னர், அங்கிருந்து அரசுத்தலைவர் மாளிகை செல்லும் திருத்தந்தைக்கு, அதிகாரப்பூர்வ வரவேற்புகள் அளிக்கப்படும்.

பல்கேரிய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை மாளிகை செல்லல், புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் திருவுருவங்களின் முன்னர் செபித்தல், புனித அலெக்சாந்தர் நெவிஸ்கி வளாகத்தில் அல்லேலூயா வாழ்த்தொலி உரையாற்றுதல், மாலையில் முதலாம் அலெக்சாந்தர் Knyaz வளாகத்தில் திருப்பலி போன்றவை, முதல் நாள் பயணத்திட்ட நிகழ்வுகளாகும்.

இரண்டாவது நாளும் பல்கேரியாவில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, மே 7, செவ்வாயன்று, வட மாசிடோனியா செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்று இரவு 8.30 மணியளவில் உரோம் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணம் முற்றுப்பெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2019, 14:46