தேடுதல்

Vatican News
பல்கேரியா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் திருத்தந்தை பல்கேரியா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் திருத்தந்தை  (AFP or licensors)

‘ஒன்று சேர்ந்து அமைதியை ஊக்குவித்தல்’ கருத்தரங்கு

‘ஒன்றுசேர்ந்து அமைதியை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், திருப்பீட பல்சமய உரையாடல் அவை, ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு மையத்தில், மே 21, இச்செவ்வாயன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 21, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தரும் அமைதி, ஒரு கொடையாகும். அதனை மனிதச் செயல்களால் அடைய இயலாது. இயேசு தரும் அமைதி வித்தியாசமானது, அது அனைத்தையும் தாங்கிக்கொள்ளக் கற்றுத் தருகிறது, நம் வாழ்வின் சுமைகளை, இன்னல்களை, பணியை, அனைத்தையும் தாங்கிக்கொள்ளவும், துணிச்சலுடன் முன்னோக்கிச் செல்லவும் உதவுகின்றது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அமைதி குறித்த கருத்தரங்கு

மேலும், ‘ஒன்றுசேர்ந்து அமைதியை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், திருப்பீட பல்சமய உரையாடல் அவை (PCID), ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு மையத்தில், மே 21, இச்செவ்வாயன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையும், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும் (WCC) கொண்டிருக்கும் உடன்பிறந்த ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக, இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜெனீவாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில், அமைதியை நிலைநிறுத்தல் பற்றிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு ஏடுகள் பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

2019ம் ஆண்டு பிப்ரவர் 4ம் தேதி, அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் இஸ்லாம் தலைமைக்குரு அகமது அல் தாயிப் அவர்களும் இணைந்து வெளியிட்ட, ‘உலக அமைதிக்காக மனித உடன்பிறந்த நிலை மற்றும் ஒன்றிணைந்து வாழ்தல்’ என்ற ஏடும், ‘பல்சமய உலகில் அமைதிக் கல்வி-ஒரு கிறிஸ்தவக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில், WCC மன்றமும், PCID அவையும் இணைந்து தயாரித்த ஏடும், இக்கருத்தரங்கில் கவனம் செலுத்தப்பட்டன.      

21 May 2019, 15:16