தேடுதல்

Vatican News
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

இயேசுவின் அன்பின் பலம் கொண்டு பிறரை அன்புகூர

இயேசு கொடுத்த புதியக் கட்டளை என்னவெனில், அவர் நம்மை அன்புகூர்வது போல் நாமும் பிறரை அன்புகூர்வதாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு நம்மீது காட்டும் அன்பின் துணைகொண்டு நாமும் பிறரை அன்புகூரும்போது, அது மனித உறவுகளின் அடிப்படையாக மாறி, நம் பலவீனங்களை வெற்றிகொள்ளவும், பாலங்களை கட்டியெழுப்பி, உடன்பிறந்த உணர்வின் சக்தியை வெளிப்படுத்தவும் உதவுகின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று, வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் குழுமியிருந்த 20,000த்திற்கும் அதிகமானத் திருப்பயணிகளுக்கு, நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் உங்களை அன்புகூர்ந்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் அன்புகூருங்கள் என்ற இயேசுவின் புதிய கட்டளை குறித்து உரையாற்றினார்.

உன்னைப்போல் உன் அயலாரையும் அன்புகூர்வாயாக என்பது, பழைய ஏற்பாட்டிலேயே ஆண்டவரால் கூறப்பட்டுள்ளபோதிலும், இயேசு கொடுத்த புதியக் கட்டளை என்னவெனில், அவர் நம்மை அன்புகூர்வது போல், நாமும், பிறரை அன்புகூர்வதாகும் என்றார் திருத்தந்தை.

எவ்வித முன் நிபந்தனைகளும் இன்றி, எவ்வித எல்லைகளுமின்றி எதிர்பார்ப்புகளுமின்றி சிலுவைச்சாவு வரைச் சென்று நம்மை அன்புகூர்ந்த இயேசுவைப்போல் பிறரை அன்புகூர நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நான் உங்களை அன்புகூர்ந்தது போல்' என இயேசு கூறும்போது, நம் அன்பின் துணை கொண்டல்ல, மாறாக, இயேசுவின் அன்பின் பலம் கொண்டு நாம் பிறரை அன்புகூர வேண்டும் என வலியுறுத்துகிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அன்பை தூய ஆவியார் நம் இதயங்களில் தூண்டுவார் எனவும் கூறினார்.

நாம் மற்றவர் மீது காட்டும் அன்பு, நாம் நம்மீது காட்டும் அன்பை ஒத்ததாக மட்டும் இருந்தால் போதாது, இயேசு நம்மீது காட்டிய எல்லையற்ற அன்பாகவும் இருக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

19 May 2019, 13:00