தேடுதல்

பாத்திமா அன்னை திரு உருவத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் பாத்திமா அன்னை திரு உருவத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனிதத்துவத்தின் பாதையில் வழி நடத்தியருளும் பாத்திமா அன்னையே

இறைவனையும் நம் சகோதர சகோதரிகளையும், இவ்வுலகம் முழுமையையும் அன்புகூரவும், இந்த அன்பில் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், உதவும் இறைவனின் திட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 13, இத்திங்களன்று, பாத்திமா நகர் அன்னை மரியா திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்த அன்னையை நோக்கி செபிக்கும் தொனியில், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'பாத்திமாவின் அன்னை மரியாவே, நாங்கள் ஒவ்வொருவரும் உம் கண்களில் விலையேறப் பெற்றவர்கள், மற்றும், எங்கள் இதயங்களில் இருக்கும் எதுவும் உம்மை மனம் நோகச் செய்யாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உம் அரவணைப்போடு எம் வாழ்வைப் பாதுகாத்து, புனிதத்துவத்தின் பாதையில் எம்மை வழி நடத்தியருளும்'  என எழுதியுள்ளார்.

மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டரில், 'இறைவனையும் நம் சகோதர சகோதரிகளையும், இவ்வுலகம் முழுமையையும் அன்புகூரவும், இந்த அன்பில் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், உதவும் தன் திட்டத்தை, இறைவன் நம்மிலும் தன் படைப்பு முழுவதிலும் வைத்துள்ளார்' என எழுதியுள்ளார்.

தன் இரண்டாவது டுவிட்டரில், ‘நம் துவக்க காலத்திலிருந்தே இறைவன் நமக்கென வடித்துள்ள அன்பின் திட்டத்தை கண்டுகொள்ளவும், அதை துணிச்சலுடன் ஏற்று நடைபோடவும் உதவவேண்டும் என, இறையழைத்தலுக்காக செபிக்கும் இந்த உலக நாளன்று, செபத்தில் ஒன்றிப்போம்' என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, Burkina Faso நாட்டில், ஞாயிறு காலை திருப்பலி நடந்து கொண்டிருந்தபோது, இஸ்லாம் மதத்தின் தீவிரவாதிகளால், ஓர் அருள்பணியாளரும், 5 இறைமக்களும் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக, திருப்பீடத்தின் திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Burkina Faso நாட்டின் Dablo எனுமிடத்தில் Abbé Siméon Yampa என்ற 34 வயது அருள்பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, ஆயதங்களுடன் கோவிலில் புகுந்த 20 இஸ்லாமியத் தீவிரவாதிகள், அவரைச் சுட்டுக் கொன்றதுடன், கோவிலில் இருந்த மக்களுள், ஐவரை தேர்வு செய்து, சுட்டுக்கொன்று விட்டு, அக்கோவிலுக்கும் தீயிட்டுச் சென்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2019, 15:32