திருத்தந்தையின் மறைக்கல்வியுரை திருத்தந்தையின் மறைக்கல்வியுரை  

மறைக்கல்வியுரை : அப்பா என அழைக்கும் துணிவு

சீடர்களின் இதயங்களில் தன் மூச்சுக் காற்றை விடுபவர் தூய ஆவியார் என்பதே, ஒவ்வொரு செபத்தின் முதன்மைக் கூறாக இருக்கிறது என்பதை, புதிய ஏற்பாடு முழுவதும் நாம் தெளிவாகக் காண்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த சில வாரங்களாக 'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே' என்ற இயேசு கற்பித்த செபம் குறித்து தன் கருத்துக்களை புதன் மறைக்கல்வி உரைகளில் பகிர்ந்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் அதனை நிறைவு செய்தார். முதலில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் 8ம் பிரிவிலிருந்து, 'அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்'(உரோ.8,15), என்ற பகுதி வாசிக்கப்பட, 'விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே' என்ற செபம் குறித்த தன் இறுதி உரையை வழங்கினார் திருத்தந்தை..

அன்பு சகோதரர், சகோதரிகளே, 'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபம் குறித்த மறைக்கல்வித் தொடரை இன்று நிறைவு செய்கிறோம். கிறிஸ்தவ செபம் என்பது, இறைவனை, 'அப்பா' என அழைப்பதற்குத் துணிச்சலைத் தருவதுடன் துவங்குகிறது என்பதை இயேசு வெளிப்படுத்தியுள்ளார். இயேசு, தாமே பயன்படுத்திய செபத்தில் வெளிப்படுத்திய வார்த்தைகளில் எல்லாம் ''விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே' என்ற பதத்தை நம் நினைவுக்குக் கொணர்வதை பார்க்கிறோம். சீடர்களின் இதயங்களில் தன் மூச்சுக் காற்றை விடுபவர் தூய ஆவியார் என்பதே, ஒவ்வொரு செபத்தின் முதன்மைக் கூறாக இருக்கிறது என்பதை, புதிய ஏற்பாடு முழுவதும் நாம் தெளிவாகக் காண்கிறோம். இறையருளினால் நாமனைவரும் அன்பு குறித்த மூவொரு கடவுளின் உரையாடல் நோக்கி கவரப்படுகிறோம் என்பதே கிறிஸ்தவ செபத்தின் மறையுண்மையாகும். சிலுவையில் இயேசு, 'என் கடவுளே, என் கடவுளே' எனக் கூக்குரலிட்டதில், தந்தைக்கும் அவருக்குமிடையே உள்ள உறவின் உறுதிப்பாடு தெரிகிறது. இது, நம் நம்பிக்கை மற்றும் செபத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" என்ற இயேசுவின் செபத்தை, இந்த மறைக்கல்வி உரையின் இறுதியில் நாம் மீண்டும் எடுத்துரைப்போம் என மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உட்பட பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு, தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2019, 15:36