Vrazhdebna புலம்பெயர்ந்தோர் முகாமில் திருத்தந்தை பிரான்சிஸ் Vrazhdebna புலம்பெயர்ந்தோர் முகாமில் திருத்தந்தை பிரான்சிஸ் 

Vrazhdebna புலம்பெயர்ந்தோர் முகாமில் திருத்தந்தை

சமுதாயத்தில் நிலவும் காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு, புலம்பெயரும் சிறார், நமக்கு எப்போதும் உதவுகின்றனர். இச்சிறார், தங்கள் சொந்த நாடுகளில் இடம்பெறும் போர் மற்றும் துன்பங்களிலிருந்து தப்பித்து, நம்பிக்கை உணர்வோடு உலகின் பிற பகுதிகளுக்கு வருகின்றனர் - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மே 6, இத்திங்கள், பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா குடியரசுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொண்டுள்ள மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள். சோஃபியா நகரின் திருப்பீட தூதரகத்திலிருந்து 8.2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Vrazhdebna புலம்பெயர்ந்தோர் முகாமிற்கு, இத்திங்கள், உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு, காரில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். சோஃபியா நகரின் புறநகரிலுள்ள முன்னாள் பள்ளி ஒன்று, 2013ம் ஆண்டில், முகாமாக, மாற்றப்பட்டது.  இம்முகாமுக்குச் சென்ற திருத்தந்தையை, அதன் இயக்குனரும், காரித்தாஸ் அமைப்பின் இயக்குனரும் வரவேற்றனர். பின்னர், அம்முகாமின் உணவு அறையில், சிரியா, ஈராக், பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளைச் சார்ந்த, ஏறத்தாழ ஐம்பது புலம்பெயர்ந்த சிறார் மற்றும் அவர்களின் பெற்றோரைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்முகாமில் பணியாற்றும் தன்னார்வலர் ஒருவர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் இச்சிறார் பாடல் ஒன்றை இசைத்தனர். இச்சிறாரிடமிருந்து, அவர்கள் வரைந்த ஓவியங்களை, திருத்தந்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இவர்களிடம் பேசிய திருத்தந்தை, சமுதாயத்தில் நிலவும் காரியங்களை நாம் புரிந்துகொள்வதற்கு சிறார் எப்போதும் உதவுகின்றனர். இச்சிறார், தங்கள் சொந்த நாடுகளில் இடம்பெறும் போர் மற்றும் துன்பங்களிலிருந்து தப்பித்து, நம்பிக்கை உணர்வோடு உலகின் பிற பகுதிகளுக்கு வருகின்றனர். இன்றைய உலகில், புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும், ஒரு சிலுவையின் பகுதியாக, மனித சமுதாயத்தின் ஒரு சிலுவையின் பகுதியாக உள்ளனர். இது, ஏராளமான மக்கள் துன்புறும் சிலுவை என்று கூறினார். திருத்தந்தையின் இச்சந்திப்பு பற்றித் தெரிவித்த, திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், இது மிகவும் இதமான சூழலில் இடம்பெற்றது. பல்வேறு நாடுகள், மற்றும் மதங்களைச் சார்ந்த மக்கள் பற்றி நாம் பேசுவது நல்ல காரியம், அதேநேரம், திருத்தந்தை, இந்த ஆண்கள், பெண்கள், சிறார், மற்றும் குடும்பங்களை அரவணைப்பதைக் காண்கையில், அது நம் உள்ளத்தை நெகிழ வைக்கின்றது என்று கூறினார். இச்சந்திப்பை முடித்து, Plovdiv நகருக்கு விமானத்தில் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2019, 15:42