இத்தாலிய விளையாட்டு அமைப்பினர் சந்திப்பு இத்தாலிய விளையாட்டு அமைப்பினர் சந்திப்பு 

விளையாட்டு, பிறரை மதிக்கும் விதத்தைக் கற்றுத்தருகிறது

1944ம் ஆண்டில் நிறுவப்பட்ட இத்தாலிய விளையாட்டு அமைப்பு, இவ்வாண்டில் தனது 75ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றது. இந்த அமைப்பில், 12 இலட்சத்துக்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

விளையாட்டு, சுயக்கட்டுப்பாட்டில் வாழவும், பிறரை மதிக்கவும் கற்றுத்தரும் மாபெரும் கல்விக்கூடம் என்று, இத்தாலிய விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்களிடம்  இச்சனிக்கிழமையன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் விளையாட்டை ஊக்குவிப்பதற்கென, இத்தாலிய தன்னார்வலர் விளையாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டை முன்னிட்டு, அதன் ஏறத்தாழ நானூறு உறுப்பினர்களை, மே 11, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விளையாட்டில் கற்றுக்கொள்ளப்படும் படிப்பினைகள், ஒவ்வொரு நாளும் படிப்பு, வேலை மற்றும், மற்றவரோடு கொள்ளும் உறவுகளில் ஏற்படும் சோர்வுகளை எதிர்கொள்வதற்கு உதவுகின்றன என்றும், விளையாட்டில் எதிர்கொள்ளப்படும் போட்டிகள், ஒன்றிணைந்து வாழ்வதற்கு விதிமுறைகள் முக்கியம் என்பதைக் கற்றுக்கொடுக்கின்றன என்றும், திருத்தந்தை தெரிவித்தார்.

உடன்பிறந்த உணர்வில் வளருவதற்கு விளையாட்டு உதவுகின்றது என்றும், இதனாலே, இத்தாலிய விளையாட்டு அமைப்பு, விருந்தோம்பல், நலவாழ்வு, வேலைவாய்ப்பு, சம வாய்ப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறாரையும் வளர்இளம் பருவத்தினரையும் பாதுகாத்தல், சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழ்தல் ஆகியவற்றை வளர்க்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், நம் சமுதாயத்தின் நல்மாற்றத்தை எட்டுவதற்கும் ஒரு கருவியாக அமைந்துள்ள விளையாட்டு, உரையாடல் கலாச்சாரத்தையும், சந்திப்புகளையும், மதிக்க உதவுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நலமான போட்டிகள், எதிரணியை, நண்பராகவும், உடன்பிறந்தவராகவும் நோக்கச் செய்கின்றது என்றும் கூறினார்.

கிறிஸ்தவ கண்ணோட்டம்

இதுவே கிறிஸ்தவ கண்ணோட்டம், விளையாட்டுக்கும் இதுவே அடித்தளமாக அமைகின்றது என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் கண்களால் பிறரைப் பார்ப்பது, இயேசுவின் செயல்களால் காரியங்களை ஆற்றுவது, கிறிஸ்தவ கண்ணோட்டம் என்றும் உரைத்தார்.

இத்தாலிய விளையாட்டு அமைப்பினர், தங்களின் பங்குத்தளங்களில், கிறிஸ்தவ கண்ணோட்ட உணர்வில் செயலாற்றுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, விளையாட்டு வீரர்கள், தங்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்றியுணர்வுடன் நடந்துகொள்ளுமாறு கூறினார்.

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளர்கள் போன்றோடு எப்போதும் நெருக்கமாக இருக்கவும், அதன் வழியாக, அவர்கள், தாங்கள் ஒதுக்கப்படவில்லை என்று உணர்வார்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள், தாங்கள் வாழும் சூழல்களில் மறைப்பணியாளர்களாக மாறுவதற்கு தனது நல்வாழ்த்தையும், ஆசிரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2019, 15:55