புதன் மறைக்கல்வி உரை வழங்கச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரை வழங்கச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் 

கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை

பொது நலனை நாடும் அகில உலக கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தினர், தங்கள் உரையாடல் முயற்சிகளில் வெற்றிகாண தான் வாழ்த்துவதாகக் கூறினார் திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், Nostra Aetate என்ற அறிக்கையை வெளியிட்ட நாள் முதல், யூத-கத்தோலிக்க உரையாடல், நற்கனிகளை வழங்கி வந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகில உலக கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

பல்சமய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு யூத அமைப்பு, கத்தோலிக்க, யூத உறவுகளை வளர்க்கும் திருப்பீட அவை, மற்றும் இத்தாலிய ஆயர் பேரவை ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து, உரோம் நகரில் நடத்திவரும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பன்னாட்டு உறுப்பினர்களை, இப்புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்காக தான் தயாரித்திருந்த செய்தியை அவர்கள் கரங்களில் வழங்கியபின், ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்தார்.

உலகின் அனைத்து நாடுகளும், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை குறித்து, கத்தோலிக்க-யூத உறவுக் கழகத்தின் கூட்டத்தில், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவது தனக்கு மகிழ்வளிப்பதாக, திருத்தந்தை, இச்செய்தியில் கூறியுள்ளார்.

மதங்களுக்கிடையே உரையாடல் முயற்சிகள் நடைபெறும் வேளையில், அவை, சகிப்புத்தன்மையை வளர்ப்பதோடு, பல்வேறு மதத்தவருக்கிடையே மதிப்பையும் வளர்க்கின்றன என்று, திருத்தந்தை, பன்னாட்டு பிரதிநிதிகளிடம் வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்" (நீதிமொழிகள் 12:20) என்ற விவிலியச் சொற்களை மேற்கோளாக, தன் செய்தியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொது நலனை நாடும் இக்குழுவினர், தங்கள் உரையாடல் முயற்சிகளில் வெற்றிகாண தான் வாழ்த்துவதாகக் கூறி, இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2019, 15:38