பல்கேரியா வரைபட பின்னணியில் இரு திருத்தந்தையர்கள் பல்கேரியா வரைபட பின்னணியில் இரு திருத்தந்தையர்கள் 

பல்கேரிய மக்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

பல்கேரியாவில், புனிதர்கள் சிரில் மற்றும், மெத்தோடியசின் நற்செய்திப் பணிகள், கடந்த நூற்றாண்டின் இன்னல்நிறைந்த காலத்திலும்கூட, மிகுந்த பலனைத் தந்துள்ளன என, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அடிக்கடி கூறுவார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பல்கேரியா திருத்தூதுப்பயணம், தனக்கும், தனது உடனுழைப்பாளர்களுக்கும், விசுவாசம், ஒன்றிப்பு மற்றும், அமைதியின் திருப்பயணமாக அமையும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.

மே 5, வருகிற ஞாயிறன்று பல்கேரியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி, மே 3, இவ்வெள்ளியன்று அந்நாட்டு மக்களிடம் காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் உதவியுடன், இன்னும் சிலநாட்களில் உங்களோடு இருப்பேன் என்று கூறியுள்ளார்.

புனித உடன்பிறப்புகளான சிரில் அவர்களும், மெத்தோடியஸ் அவர்களும், பல்கேரியாவில் நற்செய்தியை விதைத்து, மிகுந்த பலனுள்ள கனிகளைத் தந்ததிலிருந்து, உங்கள் மண், கடந்த நூற்றாண்டின் இன்னல்நிறைந்த காலத்திலும்கூட, விசுவாசத்தின் சாட்சியாய் விளங்கியது என்று, பல்கேரிய மக்களிடம் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த திருத்தூதுப்பயணத்தில், பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும்தந்தை அவர்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன் என்றும், நாங்கள் இருவரும், அனைத்து கிறிஸ்தவர்கள் மத்தியில், உடன்பிறப்பு ஒன்றிப்பின் பாதையில், ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு இருக்கும் விருப்பத்தைத் தெரிவிப்போம் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

புனித திருத்தந்தை 23ம் ஜான்

அன்பு நண்பர்களே, சோஃபியாவில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள், அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றி, உங்கள் எல்லார் மனதிலும், இன்றுவரை, பாசத்துடன் உயர்ந்து நிற்கும், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் நினைவாகவே, எனது திருத்தூதுப்பயண நிகழ்வுகள் அனைத்தும் அமையும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், விசுவாசம், ஒன்றிப்பு மற்றும் அமைதியின் மனிதர், அதனாலே, அவரின் வரலாற்று சிறப்புமிக்க திருமடலான "அவனியில் அமைதி (Pacem in terris - Mir na zemyata)" என்பதையே இத்திருத்தூதுப்பயணத்தின் தலைப்பாக நான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை, செபத்தால் தன்னோடு பயணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்கேரியாவுக்கு, அமைதி மற்றும் வளமையை இறைவன் அருள்வாராக என, நன்றி சொல்லி, தனது காணொளியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2019, 14:33