தேடுதல்

Vatican News
இத்தாலிய திருஅவை அருங்காட்சியகங்கள் கழகத்தினருடன் திருத்தந்தை இத்தாலிய திருஅவை அருங்காட்சியகங்கள் கழகத்தினருடன் திருத்தந்தை  (Vatican Media)

புனிதத்துவம், திருஅவையின் உண்மையான அழகு

இத்தாலிய திருஅவை அருங்காட்சியகங்கள் கழகத்தின் உறுப்பினர்களை, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகத்தினர், நவீனகால கலைகளுக்கு ஆற்றிவரும் பணிகளை ஊக்குவித்தார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இறைமக்களின் புனிதத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ள திருஅவையின் அருங்காட்சியகங்கள், நாம் எல்லாரும் புனிதர்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவுபடுத்துகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

இத்தாலிய திருஅவை அருங்காட்சியகங்கள் கழகத்தின் ஏறத்தாழ நானூறு பேரை, மே 24, இவ்வெள்ளியன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகத்தினருக்கென தயாரித்து வைத்திருக்கும் உரையை வழங்கினால், அடுத்து தான் சந்திக்கவிருக்கும், ஐந்தாயிரத்திற்கு அதிகமானவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அதனை, இக்கழகத் தலைவரிடம் வழங்குவதாகத் தெரிவித்து, ஒவ்வொருவரையும் வாழ்த்தினார்.

புனிதத்துவம், திருஅவையின் உண்மையான அழகு எனவும், இந்த அழகு, திருஅவைக்கும், திருஅவையிலும் அருங்காட்சியகப் பணியாளர்கள் ஆற்றும் பணிக்கு அர்த்தமும், முழு மதிப்பும் அளிக்கின்றது என்று, தனது உரையில் திருத்தந்தை கூறியுள்ளார்.

திருஅவையின் அருங்காட்சியகப் பணியாளர்கள் பலர், நவீன கால கலைஞர்களுடன் உரையாடல் நடத்துவதிலும், இக்கால மொழிகளில் மக்களைப் பயிற்சிவிப்பதிலும், அருங்காட்சியகங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருவதைப் பாராட்டி ஊக்குவித்தார் திருத்தந்தை.

நவீன கால கலைகளுக்கு இளையோர் அதிகம் பழக்கப்பட்டுள்ளதால், திருஅவை அருங்காட்சியகங்கள் இத்தகைய கலைகளை ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இக்கால மக்கள், நவீனகால புனிதக் கலைகள் பக்கம் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர் என்றும், இக்கலைகள், இக்கால கலாச்சாரத்தோடு உரையாடல் நடத்துவதற்கு முக்கிய இடமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

திருஅவையின் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ள இடங்களின் மக்களோடும், அதேபோன்ற ஏனைய அருங்காட்சியகங்களுடனும் நல்லுறவு கொண்டிருப்பது இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

24 May 2019, 15:14