தேடுதல்

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் 21வது பொதுப் பேரவையின் ஆரம்ப நிகழ்வாக  திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் 21வது பொதுப் பேரவையின் ஆரம்ப நிகழ்வாக திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை  

திருத்தந்தை - நற்செய்தியே, நம் வாழ்வின் திட்டம்

பிறர் சொல்வதை தாழ்ச்சியுடன் உற்றுக்கேட்டல், ஒன்றிணைந்து செல்தல், துணிவுடன் தன்னலத்தை மறுத்தல் ஆகிய மூன்று பண்புகளும், திருஅவையின் வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தாழ்ச்சி, குழும வாழ்வு, தன்னலமறுப்பு ஆகிய மூன்று கூறுகள், திருஅவை முன்னோக்கிச் செல்வதற்கு உதவி செய்கின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளிடம், இவ்வியாழன் மாலையில் கூறினார்.

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் 21வது பொதுப் பேரவையின் ஆரம்ப நிகழ்வாக மே 23, இவ்வியாழன், மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் வரலாற்றில் முதன்முதலாக நடைபெற்ற மாபெரும் கூட்டம் பற்றிய சிந்தனைகளை வழங்கினார்.

இவ்வியாழன் திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.ப.15,7-21) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, எல்லாவற்றையும் ஒழுங்குப்படி கொண்டிருக்க வேண்டும் என திருஅவை விரும்பும், ‘திறமை வழிபாட்டு’ச் சோதனை குறித்து எச்சரித்தார்.

நம் ஆண்டவர் இந்த வழியில் பணியாற்றவில்லை, மாறாக, அவர், தூய ஆவியாரை அனுப்பினார் என்றும், வாழ்வின் நம் திட்டம் நற்செய்தியே என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசம் என்பது, சாலை வரைபடம் அல்ல, மாறாக, நம்பிக்கை உணர்வில், நாம் ஒன்றுசேர்ந்து பயணம் மேற்கொள்வதாகும் என்றும் கூறினார்.

அன்பில் நிலைத்திருங்கள்

இவ்வியாழன் திருப்பலியின் நற்செய்தி வாசகம் (யோவா.15,9-11) பற்றிய சிந்தனைகளையும் மறையுரையில் வழங்கிய திருத்தந்தை, என் அன்பில் நிலைத்திருங்கள் என்று, இயேசு தம் சீடர்களுக்கு அழைப்பு விடுத்தது குறித்தும் விளக்கினார். 

நற்கருணைப் பேழையிலுள்ள, திருநற்கருணையில் பிரசன்னமாக இருக்கும் இயேசுவுடன், குறிப்பாக, ஏழைகளாகிய வாழும் நற்கருணைப் பேழைகளுடன் நெருக்கமாக இருப்பதன் வழியாக, இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கிறோம் என்றும் கூறினார்.

இறைவார்த்தைச் சுட்டிக்காட்டும், தாழ்ச்சி, குழும வாழ்வு, தன்னலமறுப்பு ஆகிய கூறுகளில் நாம் வாழ்வதற்கு, இறைவனின் அருளை மன்றாடுவோம் என்று அழைப்பு விடுத்து, தன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகளாவிய காரித்தாஸ் பொதுப் பேரவை

‘ஒரே மனிதக் குடும்பம், ஒரே பொதுவான இல்லம்’ (One human family, one common home) என்ற தலைப்பில், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, மே 23, இவ்வியாழனன்று உரோம் நகரில் தொடங்கியுள்ள 21வது பொதுப் பேரவை, மே 28, வருகிற செவ்வாய் வரை நடைபெறும்.

இந்தப் பொது பேரவையின் சிறப்புப் பேச்சாளர்களாக, ஐ.நா.வின் உணவு வேளாண்மை நிறுவனமான FAOவின் பொதுச் செயலர், திருவாளர் ஹோசே கிரேசியானோ த சில்வா (José Graziano da Silva) அவர்களும், அமேசான் பகுதியின் மக்களைக் குறித்துப் பேசுவதற்கு, பெரு நாட்டு கர்தினால் பேத்ரோ பர்ரெத்தோ (Pedro Barreto) அவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2019, 15:28