தேடுதல்

Medjugorje அன்னை மரியா Medjugorje அன்னை மரியா 

Medjugorje காட்சிகள் குறித்த ஆய்வுகள் முடிவடையவில்லை

Medjugorjeவுக்கு திருப்பயணிகள் திருப்பயணம் மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி என்பது, மரியன்னை காட்சிகள் குறித்த அங்கீகாரமல்ல

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவின் திருத்தலமாக விளங்கும் Medjugorjeவுக்கு திருப்பயணிகள் திருப்பயணம் மேற்கொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாரப்பூர்வ அனுமதியை தற்போது வழங்கியிருப்பது, அங்கு, அன்னை மரியா காட்சியளிப்பது குறித்த அங்கீகாரமாக நோக்கப்படக்கூடாது என அறிவித்தார், இடைக்கால திருப்பீடத் தகவல் தொடர்பாளர்.

Medjugorje மரியன்னை திருத்தலத்திற்கு திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு திருத்தந்தை வழங்கியுள்ள அங்கீகாரம் குறித்து Bosnia-Herzegovinaவிலுள்ள திருப்பீடத்தூதர் பேராயர் Luigi Pezzuto அவர்களும், இம்மரியன்னை திருத்தலத்திற்கு திருப்பீடத்தின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பேராயர் Henryk Hoser அவர்களும் அறிவித்ததையொட்டி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், திருப்பயணிகளுக்கு திருத்தந்தை வழங்கியுள்ள அனுமதியையும், அன்னை மரியாவின் காட்சி குறித்த ஆய்வுகளையும், ஒன்றோடொன்று இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது என்றார்.

அன்னைமரியாவை காட்சியில் கண்டுவருவதாகக் கூறிவரும் 6 பக்தர்களின் கூற்று குறித்து திருஅவை மேற்கொண்டுவரும் ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இங்கு குழுவாக திருப்பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதியை, அன்னைமரியாவின் காட்சியின் அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி.

Medjugorje திருத்தலத்தில் அருளின் கொடைகளைத் தேடிச்சென்று பலனடையும் மக்களைக் கருத்தில் கொண்டு, மறைமாவட்ட அளவிலும், பங்குத்தள அளவிலும் இத்திருத்தலத்திற்கு திருப்பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுவதை, மேய்ப்புப்பணி அக்கறையுடன் திருத்தந்தை அங்கீகரிப்பதாகக் கூறினார் திருப்பீடத்தின் இடைக்கால தகவல் தொடர்பாளர்.

Medjugorje பங்குதளத்திற்கு திருப்பீடத்தின் சிறப்புப் பார்வையாளராக கடந்த ஆண்டு மே மாதம் 31ம்தேதி, போலந்தின் முன்னாள் பேராயர் Henryk Hoser அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்ததைத் தொடர்ந்து, தற்போது, திருப்பயணங்கள் குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைதியின் அரசியாம் அன்னைமரியாவை 1981ம் ஆண்டு ஜுன் மாதம் முதல், காட்சியில் கண்டுவருவதாக ஆறு பேர் அறிவித்ததைத் தொடர்ந்து,  Medjugorje அன்னை மரியா திருத்தலத்தில், மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2019, 15:51