தேடுதல்

Vatican News
ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் வரவேற்புரை ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் வரவேற்புரை   (AFP or licensors)

ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் வரவேற்புரை

ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபையின் புதிய பேராலயம், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்குப்பின், ருமேனியர்களின் சமய சுதந்திரத்தின் அடையாளமாகவும், அழிக்கப்பட்ட ஆலயங்களின் மறுபிறப்பாகவும் விளங்குகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிறிஸ்து உயிர்தெழுந்தார் என்ற வாழ்த்துடன், ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை டானியேல் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்று உரையைத் தொடங்கினார். ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபையின் புதிய பேராலயத்தில் தங்களை இன்று வரவேற்கிறேன். 1999ம் ஆண்டு மே 7-9ம் தேதி வரை, ருமேனியாவில், திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ருமேனியாவை, “இறைவனின் அன்னையின் தோட்டம்” என அழைத்தார். ருமேனியாவின் தேசிய அடையாளமாக விளங்கும் இப்புதிய பேராலயம், இந்தப் பெயரை உறுதிப்படுத்துகின்றது. இப்புதிய பேராலயம் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்குப்பின், ருமேனிய மக்களின் சமய சுதந்திரத்தின் அடையாளமாகவும், அழிக்கப்பட்ட ஆலயங்களின் மறுபிறப்பாகவும் எழுந்து நிற்கின்றது. இப்பேராலயம், திருத்தூதர் அந்திரேயாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவர், ருமேனியர்களின் திருத்தூதர் மற்றும் நாட்டின் பாதுகாவலர். இவர், முதல் நூற்றாண்டில் தற்போதைய ருமேனியப் பகுதியில், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். மேலும், 1999 மற்றும் 2002ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், முதுபெரும்தந்தை Teoctist அவர்களிடம், இப்பேராலயத்திற்கு 2 இலட்சம் டாலர் நிதியுதவி வழங்கினார். கடவுளின் குரல்களான, ஆலய மணிகள் வாங்குவதற்கு, ஆஸ்ட்ரியாவின் இன்ஸ்பூர்க் கத்தோலிக்க அமைப்பு உதவியது. கத்தோலிக்கர் ஆற்றிய இந்த உதவிகளுக்கும், இத்தாலியிலும், மற்ற நாடுகளிலும், ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபைக்கு வழங்கி வரும் மற்ற ஆதரவுகளுக்கும் நன்றி. உரோம் கத்தோலிக்கத் திருஅவை, ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபை சமுதாயங்களுக்கு, இத்தாலியில் 306, ஏனைய நாடுகளில் 120 என, 426 வழிபாட்டுத்தலங்களைக் கொடுத்து உதவியுள்ளது. ருமேனிய உபசரிப்பின் அடையாளமாக, மொசைக் வேலைப்பாடுகளாலான திருத்தூதர் அந்திரேயாவின் திருவுருவப் படத்தை அன்பளிப்பாக அளிக்கிறேன். தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்க என, ருமேனிய மக்கள் அனைவருடனும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை டானியேல் அவர்கள், தனது உரையை நிறைவுசெய்தார்,

31 May 2019, 16:15