தேடுதல்

Vatican News
Skopjeல்  அருள்பணியாளர்கள், இருபால் துறவியரைச்  சந்திப்பு Skopjeல் அருள்பணியாளர்கள், இருபால் துறவியரைச் சந்திப்பு  (ANSA)

வட மாசிடோனியாவில் திருத்தூதுப் பயண நிறைவு

வட மாசிடோனியா அருள்பணியாளர்கள், மற்றும் இருபால் துறவியரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் - நம் வலிமை, சக்தி, செல்வாக்கு ஆகியவற்றின் இரகசியம், நம்மில் அல்ல, வேறு ஒன்றில் உள்ளது என்பதே உண்மை.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வட மாசிடோனியா குடியரசு, தென்கிழக்கு ஐரோப்பாவில், பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இது, முன்னாள் யுக்கோஸ்லாவியாவிலிருந்து தனி நாடாகப் பிரிவதாக அறிவித்து,1991ம் ஆண்டு செப்டம்பரில், மாசிடோனியா குடியரசு என்ற பெயரில், தனி நாடானது. 1993ம் ஆண்டில், ஐ.நா.வில் உறுப்பினரான இந்நாடு, பெயரை வைத்து, கிரீஸ் நாட்டுடன் ஏற்பட்ட சர்ச்சையால், வட மாசிடோனியா குடியரசு என பெயர் மாற்றம் செய்ய இசைவு தெரிவித்தது. அப்பெயர், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அமலுக்கு வந்தது. வட மாசிடோனியத் தலைநகர் Skopje, புனித அன்னை தெரேசா அவர்களின் பிறப்பிடமாகும். இந்நகரில், மே 07, இச்செவ்வாயன்று ஒரு நாள்  திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசு, தூதரக மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்தவேளையில், அந்நாட்டில், பல்வேறு இனத்தவரும், மதத்தவரும் அமைதியாக, நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவது, அந்நாட்டின் மிகவும் விலைமதிப்பில்லா சொத்து எனப் பாராட்டினர். உலகெங்கும் அன்னை தெரேசா என எளிமையாக அழைக்கப்படும், கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்கள், அந்நாட்டின் தேசிய பாரம்பரியச் சொத்தின் ஓர் அங்கமாக இருக்கிறார். அவர், உதவிகள் அதிகம் தேவைப்படுகின்றவர்களை அன்புகூரும் முறையை, Skopje நகரில் வளர்ந்தபோது கற்றுக்கொண்டார். இவ்வாறு உரைத்த திருத்தந்தை, பன்மைத்தன்மையில், அன்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதை, மிக முக்கியமாக, தங்களின் எடுத்துக்காட்டான வாழ்வு வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று, வட மாசிடோனிய கத்தோலிக்கரிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை. வட மாசிடோனியாவில் கத்தோலிக்கர் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே. இன்னும், நாட்டின் பல்சமய மற்றும் பல கிறிஸ்தவ சபைகளின் இளையோரைச் சந்தித்து தன் எதிர்பார்ப்புக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயது முதிர்ந்தவர்களிடம் கலந்துரையாடுங்கள், உலகில் முன்னோக்கிச் செல்வதற்கு, அவர்களிடமிருந்து, உங்களின் சொந்த வரலாறுகளைக் கற்றறியுங்கள், அன்னை தெரேசாவைப் பின்பற்றி, கனவுகளைப் பெரிதாகக் காணுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

அருள்பணியாளர், துறவியர் கடவுளைச் சார்ந்து வாழ...

வட மாசிடோனியா குடியரசில், கடைசி நிகழ்வாக, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை ஐந்து மணிக்கு, Skopje இயேசுவின் தூய இருதயப் பேராலயத்தில், அந்நாட்டின் அருள்பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் இருபால் துறவியரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்பணியாளர்களும், துறவியரும், தங்களின் மறைப்பணிகளில் கடவுளைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த பால்கன் நாட்டில், இலத்தீன் வழிபாட்டுமுறை மற்றும், பைசான்டைன் வழிபாட்டுமுறையும் இணைந்து மறைப்பணியாற்றுவதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இந்த வழிபாட்டுமுறைகள் என்ற, இரண்டு நுரையீரல்களோடு, இந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை, முழுமையாய் சுவாசிப்பதையும், தூய ஆவியாரின் என்றென்றும் புதிய மற்றும் புதுப்பிக்கும் காற்றை எடுத்துக்கொள்வதையும், இன்று என்னால் பார்க்க முடிகின்றது. இந்த இரண்டு நுரையீரல்களும், தேவையானவை மற்றும், ஒன்றுக்கொன்று ஒத்திணங்கிச் செல்பவை. ஏனெனில், ஆண்டவரின் அழகை, இன்னும் சிறப்பாகச் சுவைப்பதற்கு, இவை நமக்கு உதவுகின்றன. இதற்காக, இந்த நேரத்தில் நான் சிறப்பாக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

இரந்துண்பவர்களின் திருஅவை

அன்பு சகோதரர், சகோதரிகளே, நீங்கள் உங்கள் மறைப்பணியில், ஒரு சூழலைப் பற்றிய அனைத்துக் கூறுகளையும் நினைத்துப் பார்ப்பது எப்போதும் அவசியமான ஒன்று, ஏனெனில், இந்நாட்டில் பல துறவு இல்லங்கள் மற்றும், திருத்தூதுப் பணிகளுக்குச் சேவையாற்றுவதற்கு, அருள்பணியாளர்களும், துறவிகளும் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளனர். இதனால், தாழ்வுமனப்பான்மை ஏற்படும் ஆபத்து உள்ளது. இது, ஆண்டவரைச் சார்ந்து இருப்பதைவிட, நம்மிலே அதிகமாகச் சார்ந்து இருக்கும் சோதனையில் விழும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும். இதனாலே, ஒரு சூழலைப் பற்றிய அனைத்துக் கூறுகளையும் நினைத்துப் பார்ப்பது, அருள்பணியாளர்களும், துறவியரும் தாங்கள் பணியாற்றும் மக்களுக்கு நெருக்கமாகச் செல்லும் வாய்ப்பை வழங்குகின்றது. அதாவது, ஒவ்வொரு நாள் வாழ்விலும், போராட்டங்களைச் சந்திக்கும், வளர்ச்சியடையாத குடும்பங்கள், வயது முதிர்ந்தோர், கைவிடப்பட்டோர், நோயாளர்கள், நீண்டகாலம் படுக்கையில் இருப்போர், எதிர்காலமின்றி வாழ்வில் ஏமாற்றமடைந்துள்ள இளையோர், ஏழைகள் ஆகிய அனைவரையும் புரிந்துகொண்டு, அவர்கள் பக்கம் அருள்பணியாளர்களும், துறவியரும் ஈர்க்கப்படுவதற்கு உதவுகின்றது. நாம் பணியாற்றும் இந்த மக்கள், உண்மையிலேயே நாம் யார் என்பதை, அதாவது, ஆண்டவரின் இரக்கம் தேவைப்படும் இரந்துண்பவர்களின் திருஅவை என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றனர்.

வலிமையின் இரகசியம்

மறைப்பணிக்கு உதவாத காரியங்களைப் பின்னுக்குத் தள்ளுங்கள், தூய ஆவியாரின் இதயத்துடிப்பை அடங்கச் செய்யாதீர்கள். நாம் வலிமையானவர்களாக, சக்திமிக்கவர்களாக, மற்றும் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தால், காரியங்கள் வித்தியாசமாக இருக்கும் என்ற எண்ணம் துறவிகளாகிய நம்மில் ஏற்பட, நம்மை அடிக்கடி அனுமதிக்கின்றோம். நம் வலிமை, சக்தி, செல்வாக்கு ஆகியவற்றின் இரகசியம், ஏன் நம் இளந்துடிப்பின் இரகசியம் கூட, நம்மில் அல்ல, வேறு ஒன்றில் உள்ளது என்பதே உண்மை. உலகின் பாதை, நாம் விரும்புவதுபோன்ற பாதையின்படி இல்லாமல் இருக்கலாம். அதேநேரம், நாமும், நிறைவானவர்களாக அல்லது குற்றமற்றவர்களாக இல்லாமலும் இருக்கலாம். எனினும், கடவுள் நம்மீது வைத்துள்ள எல்லையற்ற அன்பில் நம்பிக்கை வைத்து, உலகில் இன்னும் அதிகமாகப் பணியாற்ற, விசுவாசம் நமக்கு உதவுகின்றது. எனவே மனம் தளர்ந்து விட வேண்டாம்

இவ்வாறு வட மாசிடோனிய அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியரிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் ஆற்றும் மறைப்பணிகளுக்கு நன்றி கூறினார். நம்மை வியப்பில் ஆழ்த்துவதை ஒருபோதும் நிறுத்திக்கொள்ளாத கடவுளின்  முகத்தைக் காட்டி வருவதற்காக நன்றி என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

திருத்தூதுப் பயண நிறைவு

வட மாசிடோனியா அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியர் சந்திப்பே, அந்நாட்டில் திருத்தந்தை கலந்துகொண்ட கடைசி பெரிய நிகழ்வாகும். அதன்பின்னர், அங்கிருந்து 24.1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Skopje விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. வட மாசிடோனிய அரசுத்தலைவர் விமானம் வரை சென்று திருத்தந்தையை உரோம் நகருக்கு வழியனுப்பி வைத்தார். இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவு பெற்றது. இச்செவ்வாய் உரோம் நேரம் இரவு 7.50 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, அன்னை மரியிடம் செபித்தார். மே 8, இப்புதனன்று, தனது வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரையையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

08 May 2019, 15:07